2024 டிசம்பரில் Nifty IT உச்சத்தை தொட்ட பிறகு, இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் ஐடி துறை பங்குகளில் தங்கள் முதலீட்டை பெருமளவு குறைத்துள்ளன. வருவாய் வளர்ச்சி மந்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் காரணமாக ஃபண்ட் மேனேஜர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறை மீதான மியூச்சுவல் ஃபண்டுகளின் பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 13, 2024 அன்று Nifty IT குறியீடு 45,995.80 புள்ளிகளைத் தொட்ட பிறகு, முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளில் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டனர்.
போர்ட்ஃபோலியோவில் நடந்த மாற்றங்கள்:
புள்ளிவிவரங்களின்படி, Groww Multicap Fund தனது ஐடி முதலீட்டை 54.73%-ல் இருந்து 4.75% ஆகக் குறைத்துள்ளது. இதேபோல் Samco Multi Cap Fund தனது பங்களிப்பை 34% புள்ளிகளுக்கு மேல் குறைத்துள்ளது. HDFC Flexi Cap, HDFC Large Cap மற்றும் DSP Large Cap போன்ற பெரிய ஃபண்டுகளும் தங்களது ஐடி முதலீட்டை ஒற்றை இலக்கத்திற்கு (Single Digit) கொண்டு வந்துள்ளன.
முதலீடுகள் ஏன் குறைகின்றன?
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஃபண்ட் மேனேஜர்கள் தாங்களாகவே பங்குகளை விற்பது. மற்றொன்று, 'பேசிவ் ரீபேலன்சிங்' (Passive Rebalancing). அதாவது, மற்ற துறைகளின் பங்குகள் சிறப்பாகச் செயல்படும்போது, ஐடி பங்குகள் பின்தங்கியதால் அவற்றின் விகிதம் தானாகவே குறைந்துவிடுகிறது. புதிய முதலீடுகளை ஐடி அல்லாத பிற துறைகளில் ஃபண்ட் மேனேஜர்கள் திருப்புவதும் இதற்கு ஒரு காரணம்.
மாறுபட்ட அணுகுமுறைகள்:
எல்லா ஃபண்டுகளும் ஒரே மாதிரியாகச் செயல்படவில்லை. உதாரணமாக, Parag Parikh Flexi Cap Fund தனது முதலீட்டை 28.53%-ல் இருந்து 16.17% ஆகக் குறைத்திருந்தாலும், இன்னும் ஐடி துறையில் கணிசமான முதலீட்டை வைத்துள்ளது. அதேநேரத்தில், Motilal Oswal Midcap Fund 23.73% முதலீட்டோடு ஐடி துறையில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது. சில சிறிய ஃபண்டுகள் ஐடி பங்குகளை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தை ஒரு குறிப்பகத்தான் பார்க்க வேண்டும். ஐடி கம்பெனிகளின் அடுத்தடுத்த ரிசல்ட்கள் மற்றும் நிர்வாகத்தின் கருத்துகளைக் கவனிப்பதன் மூலம், இந்தத் துறையின் எதிர்காலப் போக்கை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
