Edelweiss Mutual Fund, வருகிற ஆகஸ்ட் 12, 2026 முதல் தங்களது 7 வெளிநாட்டு பங்கு ஃபண்டுகளில் (International Equity Funds) புதிய SIP மற்றும் STP முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது, வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒழுங்குமுறை வரம்பை (Regulatory Limit) பூர்த்தி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
வெளிநாட்டு முதலீட்டில் தடங்கல்
இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளில் முதலீடு செய்வதற்கு, செபி (SEBI) ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த மொத்த வரம்பு $7 பில்லியன் ஆக உள்ளது. இந்த வரம்பு பிப்ரவரி 2022 முதல் மாற்றப்படாமல் உள்ளது.
தற்போது, பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த வரம்பை எட்டிவிட்டதால், புதிய முதலீடுகளை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில், Edelweiss Mutual Fund-ம் வருகிற ஆகஸ்ட் 12, 2026 முதல் தனது 7 சர்வதேச ஈக்விட்டி ஃபண்டுகளில் புதிய SIP (Systematic Investment Plan) மற்றும் STP (Systematic Transfer Plan) இணைப்புகளை தற்காலிகமாக நிறுத்துகிறது.
எந்தெந்த ஃபண்டுகள் பாதிக்கப்படும்?
- Edelweiss ASEAN Equity Off-shore Fund
- Edelweiss Emerging Markets Opportunities Equity Offshore Fund
- Edelweiss Europe Dynamic Equity Offshore Fund
- Edelweiss Greater China Equity Offshore Fund
- Edelweiss MSCI India Domestic & World Healthcare 45 Index Fund
- Edelweiss US Technology Equity FoF
- Edelweiss US Value Equity Offshore Fund
இந்த 7 ஃபண்டுகளில் புதிய முதலீடுகள் இனி ஏற்கப்படாது.
தற்போதைய முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த அறிவிப்பு தற்போது இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்களை பாதிக்காது. ஏற்கனவே முதலீடு செய்துள்ள யூனிட்களை வைத்து இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் தங்களது யூனிட்களை எப்போது வேண்டுமானாலும் பணமாக்கிக் கொள்ளலாம் (Redeem) அல்லது வேறு ஃபண்டுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம் (Switch).
இந்த தடை, புதிய முதலீடுகள் வருவதை மட்டுமே நிறுத்துகிறது. ஃபண்டின் செயல்திறன் (Performance) அல்லது நிதி நிலைத்தன்மை (Financial Stability) குறித்து எந்த கவலையும் இல்லை என ஃபண்ட் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
முதலீட்டு வியூகத்தில் மாற்றம்
பல முதலீட்டாளர்கள், இந்திய சந்தையை மட்டும் சாராமல், தங்கள் போர்ட்ஃபோலியோவை பரவலாக்க (Diversify) இந்த வெளிநாட்டு ஃபண்டுகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது SIP மற்றும் STP மூலம் முதலீடு செய்யும் வழி மூடப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்ய நினைத்தவர்கள் தங்களது சொத்து ஒதுக்கீட்டு வியூகத்தை (Asset Allocation Strategy) மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இந்த தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. வெளிநாட்டு முதலீட்டுக்கான புதிய வரம்பு (Headroom) கிடைத்தாலோ அல்லது ஏற்கனவே உள்ள முதலீடுகள் வெளியேற்றப்பட்டாலோ மட்டுமே இது சாத்தியமாகும்.
