பல முதலீட்டாளர்கள் சந்தையின் தற்காலிக மாற்றங்களால் பயந்து, தங்கள் நீண்ட கால நிதி இலக்குகளை பாதியிலேயே கைவிடுகிறார்கள். உணர்ச்சிகரமான முடிவுகளும், தவறான பழக்கங்களும் உங்கள் சேமிப்பை எப்படி பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
பல இந்திய முதலீட்டாளர்கள் நீண்ட கால இலக்குகளுடன், குறிப்பாக SIP (Systematic Investment Plan) முறையில் முதலீட்டைத் தொடங்குகிறார்கள். ஆனால், சந்தையில் சிறு சரிவு ஏற்படும்போது, உணர்ச்சிவசப்பட்டு முதலீட்டை நிறுத்துவது அல்லது பணத்தை வெளியே எடுப்பது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள். இந்த செயல், வெறும் காகித இழப்பை (Paper Loss) உண்மையான நஷ்டமாக மாற்றிவிடுகிறது.
Recency Bias: தவறான அணுகுமுறை
முதலீட்டாளர்கள் பெரும்பாலும் கடந்த ஆண்டில் அதிக லாபம் கொடுத்த ஃபண்டுகளைத் தேடி ஓடுகிறார்கள். இதற்கு 'Recency bias' என்று பெயர். இது சந்தையின் சுழற்சித் தன்மையை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பங்கு அல்லது ஃபண்ட், அடுத்த காலக்கட்டத்தில் அதே லாபத்தைத் தரும் என்று சொல்ல முடியாது. ஃபண்டின் அடிப்படை உத்தி (Strategy) மாறாமல் இருக்கும் வரை, குறுகிய கால மாற்றங்களுக்கு பயப்படத் தேவையில்லை.
அதீத கண்காணிப்பும் நஷ்ட பயமும் (Loss Aversion)
இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் ஆப் மூலம் தினசரி போர்ட்ஃபோலியோவைப் பார்ப்பது எளிதாகிவிட்டது. ஆனால், இதுவே பலருக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. மனித மூளை லாபத்தை விட, நஷ்டத்தை (Loss) அதிகம் உணர்வதால், திரையில் 'சிவப்பு' நிறத்தில் எண்களைப் பார்க்கும்போது தேவையற்ற பதற்றமடைந்து தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். தினசரி சந்தை மாற்றங்களுக்குப் பதில், குடும்பத் தேவைகள் அல்லது வருமான மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது போர்ட்ஃபோலியோவை ஆய்வு செய்வதே புத்திசாலித்தனம்.
காலாவதிக்கு ஏற்ப ரிஸ்க் எடுங்கள்
குறுகிய காலத் தேவைகளான குழந்தைகளின் பள்ளி கட்டணம் அல்லது வீட்டின் முன்பணம் (Down payment) போன்ற பணத்தை, அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது பெரிய தவறு. சந்தை சரியும்போது, அவசரத் தேவைக்காக அந்த முதலீட்டை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அது பெரும் நஷ்டத்தை உண்டாக்கும். எனவே, உங்கள் பணத்தின் தேவைக்கு ஏற்ப முதலீட்டுக் காலத்தை (Time Horizon) சரியாகத் திட்டமிடுவதுதான் பயங்கரமான சரிவுகளில் இருந்து உங்களைக் காக்கும் சிறந்த கவசம்.
