அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான 'Unified Media Bill' குறித்து பார்லிமென்டரி கமிட்டி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் 2026-27 செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் பணியை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தொடங்கியுள்ளது. இதில் மிக முக்கிய விவாதப் பொருளாக 'Unified Media Bill' உள்ளது. இதன் மூலம் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை நிர்வகிக்க ஒரே ஒரு ஒழுங்குமுறை அமைப்பை (Single Regulatory Body) உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஒழுங்குமுறை குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி
தற்போது, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) என இரு வேறு துறைகளின் கீழ் ஊடகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் சட்டரீதியான குழப்பங்கள் மற்றும் கொள்கை முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால், அனைத்து ஊடகங்களுக்கும் ஒரே மாதிரியான கொள்கை நடைமுறைகள் அமல்படுத்தப்படும்.
ஊடக நிறுவனங்களுக்கு என்ன தாக்கம்?
செப்டம்பர் 2026-ல் அறிவிக்கப்பட்ட 'Telecommunications (Television, Radio and Associated Services) Rules, 2026' வரைவு விதிகள், இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகும். இந்த மாற்றங்களால் ஊடக நிறுவனங்களுக்கு தற்காலிகமாக இணக்கச் செலவுகள் (Compliance Costs) அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, நிறுவனங்களின் உள் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை புதிய தரங்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த புதிய மசோதா சட்டமானால், OTT தளங்களுக்கு வயது சரிபார்ப்பு (Age Verification) மற்றும் கடுமையான உள்ளடக்க கண்காணிப்பு விதிகள் வரலாம். விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, மீடியா துறையில் முதலீடு செய்துள்ளவர்கள், புதிய சட்டத்தின் முன்னேற்றங்களையும், அது நிறுவனங்களின் லாப வரம்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் கூர்ந்து கவனிப்பது அவசியம்.
