இந்தியாவில் ஒளிபரப்பு உரிமைகள் இழுபறி
இந்தியாவில் FIFA World Cup 2026 மற்றும் 2030 தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமைகளைப் பெறுவதில் Reliance-Disney ஜாயிண்ட் வென்ச்சர் நிறுவனம் $20 மில்லியன் தொகையை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. ஆனால், FIFA இதைவிட மிக அதிகமாக, அதாவது சுமார் $100 மில்லியன் வரை எதிர்பார்க்கிறது. இந்த மிகப்பெரிய நிதி இடைவெளி காரணமாக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.
கடந்த 2022 உலகக் கோப்பைக்கான உரிமைகளை Reliance சுமார் $60 மில்லியன் கொடுத்து வாங்கியது. தற்போதைய சூழ்நிலையில், Sony போன்ற மற்ற பெரிய மீடியா நிறுவனங்களும் இந்த உரிமைகளைப் பெற நிதியளவில் சாத்தியமில்லை எனக் கூறி விலகிவிட்டன. இந்தியாவில் கிரிக்கெட்டை விட கால்பந்துக்குள்ள ஈர்ப்பு குறைவு, போட்டி நேரங்கள் நள்ளிரவில் இருப்பது, மற்றும் விளம்பர வருவாயில் ஏற்பட்டுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால், ஒளிபரப்பாளர்கள் இந்த உரிமைகளில் அதிக முதலீடு செய்ய தயங்குவதாகக் கூறப்படுகிறது.
சீனாவிலும் ஒப்பந்தம் இல்லை
அதேபோல், உலகளவில் டிஜிட்டல் தளங்களில் 49.8% பார்வையாளர்களைக் கொண்டிருந்த சீனாவிலும் இதுவரை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. 2022 உலகக் கோப்பையின்போது, சீனா மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் வியூயர்ஷிப்பை பதிவு செய்திருந்தது. வழக்கமாக, சீன அரசு தொலைக்காட்சியான CCTV, தொடர் தொடங்குவதற்கு முன்பே உரிமைகளைப் பெற்று விளம்பர வேலைகளைத் தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை அந்த நிலை இல்லை.
FIFA-க்கு பெரும் இழப்பு?
உலகக் கோப்பை தொடங்க இன்னும் வெறும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்யப்படாதது FIFA வரலாற்றில் இது ஒரு அசாதாரணமான நிலை. இதன் மூலம் FIFA தனது வருவாய் மற்றும் சந்தை மதிப்பில் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். Reliance-Disney போன்ற இந்திய மீடியா நிறுவனங்கள் இப்போது லாப நோக்கத்திலும், யதார்த்தமான வியூயர்ஷிப் கணிப்புகளின் அடிப்படையிலும் செயல்படுவதாக Dentsu India போன்ற விளம்பர நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
