மும்பை, வொர்லியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டுமானத்தை நிறுத்த மத்திய அரசு பம்பாய் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. INS Trata கடற்படை தளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள 'விருந்தாவன் கோ-ஆப் ஹவுசிங் சொசைட்டி' (Vrindavan Co-Op Housing Society) மறுசீரமைப்பு கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தக் கோரி மத்திய அரசு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த இடம் INS Trata கடற்படை தளத்திலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் இருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மத்திய அரசு வாதிடுகிறது.
பாதுகாப்பு அபாயங்கள் என்ன?
இந்த கட்டடம் உயரமாகக் கட்டப்படுவதால், கடற்படையின் ரகசிய நடவடிக்கைகள் மற்றும் வெடிபொருட்கள் சேமிக்கப்படும் பகுதிகளை எளிதில் கண்காணிக்க முடியும் என ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, பாதுகாப்புத் தளங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் 4 தளங்களுக்கு மேல் கட்ட அனுமதி இல்லை. இதற்காக அந்தந்தப் பகுதி ஸ்டேஷன் கமாண்டரிடம் இருந்து 'நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்' (NOC) பெறுவது கட்டாயம்.
அனுமதி பெறுவதில் குளறுபடி
மேற்கத்திய கடற்படை கட்டளை மையம் (Western Naval Command) கடந்த 2018-ம் ஆண்டு முதலே இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து வந்துள்ளது. இருப்பினும், மாநகராட்சி (BMC) கடந்த 2023-ம் ஆண்டு இந்த கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
இந்த வழக்கு, மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களில் ரியல் எஸ்டேட் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, இதுபோன்ற பாதுகாப்பு மண்டலங்களுக்கு அருகில் நிலுவையில் உள்ள மற்ற திட்டங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதால், ரியல் எஸ்டேட் துறை இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
