ஆன்டி-கேப்சர் மருந்துகளுக்கு மட்டும் ஏன் விலை கட்டுப்பாடு என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் மீது விலை கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினால், பார்மா மற்றும் மருத்துவமனை நிறுவனங்களின் லாப வரம்பு (Margin) குறைய வாய்ப்புள்ளது.
மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது கேன்சர் நோய்க்கான மருந்துகள் மீது மட்டுமே கடும் விலை கட்டுப்பாடுகளும், வர்த்தக வரம்புகளும் (Trade Margin Caps) அமலில் உள்ளன. இந்த சூழலில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, மற்ற அத்தியாவசிய மருந்துகளுக்கு ஏன் இதேபோன்ற விலை கட்டுப்பாடு இல்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
பார்மா மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை நிறுவனங்களின் வருவாய் மாடலில், 'நான்-ஷெட்யூல்டு' (Non-scheduled) மருந்துகளின் வர்த்தக வரம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது DPCO 2013 விதிகளின்படி, சில மருந்துகளுக்கு 16% வரை லாப வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேன்சர் மருந்துகளுக்கு மட்டும் 30% என்ற அளவில் வரம்பு கொண்டு வரப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் புதிய பார்வையால், இது அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டால், நிறுவனங்களின் லாபம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.
ரிஸ்க் என்ன?
நிறுவனங்கள் தங்களது இயக்கச் செலவுகளை (Operating Costs) ஈடுகட்ட, மருந்துகள் மீது அதிக லாப வரம்பை வைத்து விற்பனை செய்கின்றன. அரசு அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் விலை கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்தினால், பார்மா பிரிவின் லாப வரம்பு குறையக்கூடும். இது ஏற்கனவே சந்தையில் பார்மா பங்குகளில் நிலவும் ஏற்ற இறக்கத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையில் அரசு எடுக்கும் முடிவே இத்துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
