தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் மீது உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட ஆணையத்தின் ஆலோசனையின்றி, ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது தேர்தல் ஆணையத்தில்?
வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்துள்ள இந்த மனு, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தற்போதைய செயல்பாட்டு முறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2023-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின்' கீழ், CEC ஒரு சமமான அதிகாரிகளுள் ஒருவரே தவிர, மற்றவர்களின் கருத்தை மீறி முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று மனுதாரர் வாதிடுகிறார்.
எழும் முக்கிய புகார்கள்:
- எலக்டோரல் ரோல் சிக்கல்கள்: தேர்தல் ஆணையர்கள் சுக்்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் பட்டியல் தொடர்பான சாப்ட்வேர் அப்டேட்கள் செயல்படுத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநில வாரியான முறைகேடுகள்: கோவாவில் தகுதியான 97 வாக்காளர்களை மீண்டும் சேர்க்க தவறியதும், மேற்கு வங்கத்தில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 16.10 லட்சம் வாக்காளர்களின் பதிவுகளை எதிர்த்து கமிஷன் பெயர்லேயே மேல்முறையீடு செய்தது போன்ற குளறுபடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- நிர்வாக மாற்றங்கள்: வாக்காளர் பதிவுக்கான 'Form 6'-ல் முன்னோர்களின் விவரங்களைக் கேட்பது மற்றும் கடந்த ஜூலை 28 அன்று IT பிரிவின் அதிகாரங்களை மாற்றி அமைத்தது போன்றவை, மற்ற ஆணையர்களின் ஒப்புதல் இன்றி நடந்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டம் என்ன?
இந்த ஒருதலைப்பட்சமான முடிவுகளை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க கோரி, கடந்த அக்டோபர் 1 முதல் சேமிக்கப்பட்ட சர்வர் லாக் (Server Logs) மற்றும் தரவுகளைப் பாதுகாக்குமாறு உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டையும், அதன் உட்புற அதிகாரக் கட்டமைப்பையும் இந்த வழக்கு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
