Supreme Court பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, நில பயன்பாட்டு விதிகளை மீறும் கட்டிடங்கள் மீது சட்டப்பூர்வ வழக்குகள் இருந்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் தடையின்றி நடவடிக்கை எடுக்கலாம். இது குடியிருப்பு பகுதிகளில் வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி நில பயன்பாட்டு விதிகளை மீறும் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளைத் தடுக்க, உரிமையாளர்கள் நீதிமன்ற வழக்குகளை ஒரு கேடயமாகப் பயன்படுத்த முடியாது என்று நீதிபதிகள் அஷானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
வணிக நிறுவனங்களுக்கு உள்ள ஆபத்து என்ன?
நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் ரீடெய்ல் கடைகள், உணவகங்கள் மற்றும் கோ-வொர்க்கிங் நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பல நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதன் மூலம் மாநகராட்சி நடவடிக்கைகளைத் தள்ளிப்போட்டு வந்தன. ஆனால், இனி இந்த 'ஸ்டே' (Stay) மற்றும் சட்ட பாதுகாப்பு கிடைக்காது என்பதால், விதிகளுக்குப் புறம்பாக இயங்கும் நிறுவனங்கள் திடீர் மூடல் அபாயத்தை சந்திக்க நேரிடும்.
முறைகேடான நடவடிக்கைகளுக்குத் தடை
சில மாநகராட்சிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படுவதையும், மற்றவர்களைக் குறிவைப்பதையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. இந்த நாடு தழுவிய கண்காணிப்பு நடவடிக்கை மூலம், இனி பாரபட்சமற்ற முறையில் சீலிங் (Sealing) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
அனைத்து மாநகராட்சிகளும் தங்களது நடவடிக்கைகளின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை நவம்பர் 23, 2026-க்குள் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பெரிய நகரங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்த நிறுவனங்களின் இடங்கள் முறையான அனுமதியுடன் உள்ளனவா என்பதை சரிபார்ப்பது அவசியம்.
