கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய **24** மணி நேர கெடு, முறையான கைது பதிவு செய்யப்படும் நேரத்திலிருந்து அல்ல, ஒருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட கணத்திலிருந்தே தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 22(2) பிரிவின் கீழ், ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதியைப் பயன்படுத்தி, போலீஸ் பதிவுகளில் கைது நேரத்தை மாற்றிக் காட்டி காலதாமதம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்தூர் கர் அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
'போலி' இடைவெளிக்கு முற்றுப்புள்ளி
இனிமேல், புலனாய்வு முகமைகள் ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு, முறையான கைது பதிவை தாமதப்படுத்தி 'பஃபர் பீரியட்' (Buffer Period) உருவாக்குவதை நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. இது போன்ற நடைமுறைகள் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பயண நேரம் தவிர, மற்ற நேரங்கள் அனைத்தும் 24 மணி நேரக் கணக்கீட்டிற்குள் கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த தீர்ப்பின் பின்னணி
'சுஜித் தாஸ் vs இந்திய அரசு' என்ற வழக்கில், NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், செப்டம்பர் 29, 2025 அன்று பிடிக்கப்பட்டும், அடுத்த நாள் தான் முறையான கைது காட்டப்பட்டது. இந்த காலதாமதத்தை சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இனி மாஜிஸ்திரேட்டுகள் கைதானவரைப் பார்க்கும்போது, முதலில் பிடிக்கப்பட்ட நேரத்தையே உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு புலனாய்வு முகமைகளின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இனி, சட்டத்தின் முன் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
