மியான்மர் எல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர் Matthew VanDyke உள்ளிட்ட 7 வெளிநாட்டினர், ஒரு மாதம் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல டெல்லி NIA நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி சிறப்பு NIA நீதிமன்றம், அமெரிக்க குடிமகன் Matthew VanDyke மற்றும் 6 உக்ரைனியர்கள் தங்கள் நாடுகளுக்கு ஒரு மாத காலம் பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம், மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் பயிற்சி, அதன் அசெம்பிளி மற்றும் ஜேமிங் தொழில்நுட்பங்களை வழங்கியதாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், தீவிரவாத தடுப்பு சட்டமான UAPA-வின் கடுமையான பிரிவுகள் நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணிந்தே அரசு இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, இந்த வெளிநாட்டினர் எப்படி மிசோரம் வழியாக மியான்மர் எல்லைக்குள் ஊடுருவ முடிந்தது என்ற கேள்வியை எழுப்பி, நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை விமர்சித்துள்ளார். இந்திய குடிமக்களுக்கு வெளிநாடுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், வெளிநாட்டினருக்கு மட்டும் இந்த தளர்வு ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இது குறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிக்கவில்லை. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இவர்கள் விரைவில் இந்தியாவிளிருந்து புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
