சுய பாதுகாப்பிற்கு CO2 மூலம் இயங்கும் ஏர் பிஸ்டல்களை பயன்படுத்தலாம் என சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின்படி, சுய பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. உரிமம் தேவையில்லை என்றாலும், இவற்றை தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சுய பாதுகாப்பிற்காக ஏர் பிஸ்டல்களைப் பயன்படுத்தலாம் என வரும் ஆலோசனைகள் பலரையும் ஈர்த்துள்ளன. ஆனால், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்கின்றனர். ஒரு கருவியை வைத்திருப்பது வேறு, அதைச் சட்டப்படி பயன்படுத்துவது வேறு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
விகிதாச்சார சோதனை (The Proportionality Trap)
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சுய பாதுகாப்பிற்கான உரிமையை வழங்கினாலும், அது நிபந்தனைக்கு உட்பட்டது. இந்திய சட்டப்படி, நீங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு இணையான பலத்தை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். உயிருக்கு ஆபத்தில்லாத சாதாரண மோதல்களுக்கு ஏர் கன் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது சட்டப்படி 'அதிகப்படியான பலப்பிரயோகம்' (Excessive Force) எனக் கருதப்படும். நீதிமன்றத்தில் உங்கள் செயலை நியாயப்படுத்த முடியாவிட்டால், உங்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்படலாம்.
உரிமம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள்
2016-ஆம் ஆண்டின் ஆயுத விதிகளின்படி, 20 ஜூல் (Joules) சக்திக்கும் குறைவான மற்றும் 0.177 இன்ச் அளவுள்ள ஏர் கன்களுக்கு உரிமம் தேவையில்லை. ஆனால், உரிமம் தேவையில்லை என்பதற்காக இதை பொம்மை என நினைக்கக்கூடாது. முறையான பயிற்சி இல்லாமல் இக்கருவிகளை கையாள்வது ஆபத்தானது. பதற்றமான சூழலில், மற்றவர்கள் உங்கள் ஆயுதத்தைப் பறித்து, உங்களையே தாக்கக்கூடும். மேலும், கையில் ஆயுதம் இருப்பது சாதாரண மோதலைக்கூட பெரிய வன்முறையாக மாற்ற வாய்ப்புள்ளது.
பொது இடங்களில் தடை
உங்களிடம் ஏர் கன் இருந்தாலும், அதை எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்ல முடியாது. மெட்ரோ நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு மிகுந்த பொது இடங்களில் ஏர் கன் அல்லது போலி ஆயுதங்களை எடுத்துச் செல்வது கடுமையான சட்டமீறல். பயணத்தின்போது பிடிபட்டால், உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும், நீங்கள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும்.
சுய பாதுகாப்பு என்பது ஆயுதங்களில் இல்லை; சூழ்நிலையை உணரும் திறன் (Situational Awareness), அவசர கால உதவி மற்றும் முறையான தற்காப்புப் பயிற்சிகளிலேயே உள்ளது. சட்ட சிக்கல்களைத் தவிர்க்க, இதுபோன்ற கருவிகளைச் சார்ந்திருப்பதை விட, முறையான தற்காப்பு வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்.
