பிசினஸ் தொடர்பான செலவுகளுக்கு மனைவியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், அதை வரி விலக்கு கோரலாம் என ITAT மும்பை தீர்ப்பளித்துள்ளது. இது பிசினஸ் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ள அதே வேளையில், சில முக்கிய ஆவணங்களை பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மும்பை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) வணிக உரிமையாளர்களுக்கு ஒரு முக்கியமான தெளிவை வழங்கியுள்ளது. தொழில்முறை செலவுகளை குடும்ப உறுப்பினர்களின் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், அதை பிசினஸ் செலவாகக் காட்டி வரி விலக்கு பெற முடியும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் செலவு உண்மையானதாக இருக்க வேண்டும் மற்றும் பிசினஸ் கணக்கிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
வழக்கின் பின்னணி என்ன?
ஒரு வணிகர் தனது வெளிநாட்டுப் பயணத்திற்காகச் செய்த ₹6.42 லட்சம் மதிப்பிலான செலவுகளை வருமான வரித்துறை நிராகரித்தது. மனைவியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியது முறையற்றது என்றும், அந்தத் தொகையை 'Professional Service' கட்டணமாகக் கருதி TDS பிடிக்க வேண்டும் என்றும் துறை வாதிட்டது. ஆனால், இது எந்தவொரு தொழில்முறை சேவையும் அல்ல, வெறும் பயணச் செலவுகளுக்கான ரீ-இம்போர்ஸ்மென்ட் (Reimbursement) மட்டுமே என தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது.
கவனிக்க வேண்டியவை (Tax Audit Risks)
இந்தத் தீர்ப்பு வணிகர்களுக்குச் சுதந்திரம் அளித்தாலும், வரி அதிகாரிகள் AIS (Annual Information Statement) மற்றும் TIS (Taxpayer Information Summary) போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வருகிறார்கள். எனவே பின்வரும் ஆவணங்களை மிகச் சரியாக வைத்திருக்க வேண்டும்:
- முழுமையான பில்கள் (Invoices): பயணச் சீட்டுகள் மற்றும் செலவுக்கான ரசீதுகள்.
- பேங்க் ஸ்டேட்மெண்ட்: செலவு செய்த கார்டு மற்றும் பிசினஸ் அக்கவுண்டில் இருந்து பணத்தைத் திரும்பச் செலுத்தியதற்கான ஆதாரங்கள்.
- தொழில்முறை நோக்கம்: இந்தச் செலவுகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இல்லை, தொழிலுக்காகவே செய்யப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள்.
வருமான வரித்துறை ஆய்வில் சிக்கல்களைத் தவிர்க்க, உங்கள் கணக்கு வழக்குகளும் வங்கிப் பரிவர்த்தனைகளும் எப்போதும் சீராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
