ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்களுக்கு Income Tax Appellate Tribunal (ITAT) ஒரு முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. இனிமேல் உங்களது மொத்த டெபாசிட் தொகையையோ அல்லது பணப் பரிமாற்றங்களையோ கணக்கில் கொள்ளாமல், உங்களுக்குக் கிடைத்த நிகர லாபத்திற்கு (Net Winnings) மட்டும் வரி கட்டினால் போதும் என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆன்லைன் கேமிங் மூலம் வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு, பெங்களூருவைச் சேர்ந்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஒரு முக்கிய தெளிவை வழங்கியுள்ளது. Arakere Channappa Vishwanath vs ITO வழக்கில், கேமிங் வாலட்டில் புழங்கும் மொத்த பணத்தை வருமானமாக கருதக்கூடாது என்றும், உண்மையான லாபத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குழப்பமும் தீர்வும்
முன்பெல்லாம், கேமிங் தளங்களில் ஒரு பயனர் டெபாசிட் செய்யும் மொத்தத் தொகையையும் வருமானமாகக் கருதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த குறிப்பிட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்கு ₹2.33 கோடி மொத்த லாபம் என வரி கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அவர் ₹28 லட்சம் நஷ்டத்தில் இருந்தார். இந்த அணுகுமுறையை தவறென நிராகரித்த ITAT, வர்த்தகத் தொகையை வருமானமாகக் கருத முடியாது எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
'உண்மையான வருமானம்' (Real Income) தத்துவம்
ITAT பெஞ்ச், 'Real Income' என்ற அடிப்படை வரி விதிப்பு தத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஒரு கேமிங் தளத்திற்குள் பணம் வருவதும் போவதும் ஒரு பரிமாற்றமே தவிர, அது லாபம் அல்ல. உண்மையான லாபம் ஈட்டப்பட்டால் மட்டுமே அதை வருமானமாகக் கருதி வரி விதிக்க முடியும். இந்தத் தீர்ப்பு, ஏற்கனவே உள்ள பிரிவு 115BBJ மற்றும் 194BA ஆகியவற்றின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய நிவாரணமாக இருந்தாலும், வருமான வரித் துறையிடம் உங்கள் லாப நஷ்டத்தை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயம்.
- கேமிங் ட்ரான்சாக்ஷன் ஹிஸ்டரி: தளங்களின் பரிவர்த்தனை அறிக்கைகள்.
- வங்கி ஸ்டேட்மெண்ட்: டெபாசிட் மற்றும் வித்ட்ராவல் ஆதாரங்கள்.
- முறையான கணக்கு: அனைத்து லாப, நஷ்ட விவரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும்.
முறையான ஆவணங்கள் இல்லை என்றால், வரி அதிகாரிகள் இன்னும் உங்கள் கணக்கை சந்தேகிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைன் கேமிங் செய்பவர்கள் இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு 'Audit Trail' வைத்திருப்பது மிகவும் அவசியம்.
