உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஒரு IPS அதிகாரியின் வயதான தாய் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது கொலை மற்றும் கொள்ளை சம்பவமாக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த உத்திரப் பிரதேசம்
உத்திரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள ருதா தம்ருவா கிராமத்தில் வசித்து வந்த IPS அதிகாரி ஆசுதோஷ் மிஸ்ராவின் தாயார், அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நேற்று (ஆகஸ்ட் 16, 2026) காலை வீட்டு வேலைக்கு வந்த பணியாளர், கதவை தட்டி திறந்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
கொலை, கொள்ளை என வழக்கு பதிவு
முதற்கட்ட விசாரணையில், இது ஒரு அசாதாரண மரணம் இல்லை என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாகவும், தாயாரின் வாயருகே இரத்தம் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக கொலை மற்றும் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடயவியல் விசாரணை தீவிரம்
தற்போது, சம்பவ இடத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு யார் வந்து சென்றார்கள் என்பது குறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் வீட்டு ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் ரீதியான விமர்சனங்கள்
இந்த சம்பவம் மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், உத்திரப் பிரதேச அரசின் சட்டம்-ஒழுங்கை கடுமையாக விமர்சித்துள்ளார். காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில அரசு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை.
தற்போது, தடயவியல் சாட்சியங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையில் கிடைக்கும் முக்கிய தகவல்கள் அடுத்த கட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
