நேரடியாக ஈடுபடாவிட்டாலும், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் பெண்களை Gang Rape வழக்கில் சேர்க்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில், நேரடியாக ஈடுபடாத பெண்கள் கூட 'Gang Rape' எனப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர் அனூப் ஜெய்ராம் பாம்பானி இந்த வழக்கை விசாரித்து, கூட்டுச் சதியில் ஈடுபடும் எவரும் சட்டத்தின் முன் குற்றவாளியே என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
இந்த வழக்கின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376D மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 70 ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. ஒரு குற்றத்தில் உடல்ரீதியாகத் தொடர்பு கொள்ளாதவர்கள் கூட, குற்றத்திற்குத் துணை நின்றாலோ அல்லது தூண்டுதலாக இருந்தாலோ, அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவே கருதப்படுவர் என நீதிமன்றம் கூறியுள்ளது.
பின்னணி என்ன?
ஜூலை 2024-ல் பதிவான ஒரு வழக்கில், தாய் ஒருவர் தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தான் பெண்ணாக இருப்பதால், ஆண்கள் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படும் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தன்னைச் சேர்க்கக்கூடாது என அந்தப் பெண் வாதிட்டார். ஆனால், வழக்கறிஞர் ரோகன் ஜே. ஆல்வா (Amicus Curiae) முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றச் செயலில் ஈடுபடும்போது பாலின வேறுபாடு பார்க்கப்படாது என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பு, ஜனவரி 17, 2025 அன்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமமான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
