திருமணம் ஆன காரணத்தாலேயே ஒரு பெண்ணுக்கு வாரிசு வேலை மறுக்கப்படக் கூடாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. Chhattisgarh Rajya Gramin Bank-ல் விண்ணப்பித்த இரு பெண்களுக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலைவாய்ப்பில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான காரணத்திற்காக பெண்களுக்கு வாரிசு வேலை (Compassionate Appointment) மறுக்கப்படுவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி ரவீந்திர குமார் அகர்வால் அடங்கிய அமர்வு, Chhattisgarh Rajya Gramin Bank-க்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
ஷீனா டேவிட் மற்றும் அங்கிதா மிஷ்ரா ஆகிய இரு பெண்கள், தங்கள் தந்தையரின் மறைவுக்குப் பிறகு வங்கி வேலைய கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்கள் திருமணமாகிவிட்ட காரணத்தால் வங்கி நிர்வாகம் அந்த விண்ணப்பங்களை நிராகரித்தது. ஆனால், அதே வங்கியில் திருமணமாகி இருந்தாலும் ஆண்களுக்கு வேலை வழங்கப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 15-ன் படி, பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவது தவறு என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். திருமணமான மகள் என்பதால் அவர் சார்ந்திருக்கவில்லை என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. தந்தை இல்லாத சூழலில் நிதி ரீதியான தேவை என்பது ஆண் வாரிசுக்கு என்னவோ, அதே அளவில்தான் பெண் வாரிசுக்கும் உள்ளது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த தீர்ப்பு Regional Rural Banks மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இனி தங்கள் கொள்கைகளை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு பல அரசு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த உத்தரவை அமல்படுத்த நீதிமன்றம் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இது போன்ற நிறுவனங்கள் தங்கள் மனிதவளக் கொள்கைகளை (HR Policies) மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது.
