Siddartha Vihar Trust நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கர்நாடகா லோக் ஆயுக்தாவிற்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது மகன் பிரியங்க் கார்கே ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட தனிநபர் புகார் குறித்து லோக் ஆயுக்தாவிடம் அறிக்கை கேட்டுள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான இந்தப் புகார், சித்தார் த விகார் டிரஸ்ட் (Siddartha Vihar Trust) விவகாரத்தை மையமாகக் கொண்டுள்ளது.
புகார் பின்னணி
'லஞ்சமுக்த கர்நாடக வேதிகே' தலைவர் விஜயராகவ மராத்தே இந்த புகாரைப் பதிவு செய்துள்ளார். பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (BDA) சிவில் அமைப்புகளுக்கான நிலங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டிரஸ்ட், தலித் நலனுக்கான ஒதுக்கீட்டில் முறையற்ற வகையில் நிலத்தைப் பெற்றதாகவும், நில குத்தகையில் 50% சலுகை மற்றும் மாற்று நிலம் பெற்றதில் அரசியல் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த வழக்கு பி.என்.எஸ்.எஸ் (BNSS) சட்டத்தின் பிரிவு 175-ன் கீழ் விசாரிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை நீதிமன்றம் மீண்டும் கையில் எடுத்துள்ளது. லோக் ஆயுக்தா எஸ்.பி. இதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
