அமெரிக்க குடியுரிமை கொண்ட நடிகர் Imran Khan, இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என Foreigners Regional Registration Office (FRRO) அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற அரசியல் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக, நடிகர் Imran Khan-க்கு Foreigners Regional Registration Office (FRRO) 'நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 28-க்குள் வெளியேற வேண்டும் என இந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக அவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
OCI உரிமைகளும் சவால்களும்
Imran Khan ஒரு OCI (Overseas Citizen of India) அட்டைதாரர். இந்தியா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்காததால், OCI அட்டைதாரர்கள் சட்டப்படி வெளிநாட்டினராகவே கருதப்படுகிறார்கள். இதனால், அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை இருந்தாலும், அவர்கள் Immigration and Foreigners Act-ன் கீழ் அரசின் கண்காணிப்பில் உள்ளனர்.
அரசியல் செயல்பாடுகளுக்குத் தடையா?
கடந்த 2021-ல் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, OCI அட்டைதாரர்கள் பத்திரிகைத்துறை, ஆராய்ச்சி போன்ற பணிகளில் ஈடுபட முன் அனுமதி தேவை என கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அரசியல் போராட்டங்களில் பங்கேற்பது குறித்து தெளிவான சட்ட விதிகள் இல்லை. இருப்பினும், செக்ஷன் 7(2)(c) மற்றும் செக்ஷன் 29-ஐப் பயன்படுத்தி அரசு நடவடிக்கை எடுத்து வருவது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு, இந்தியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான OCI அட்டைதாரர்களின் அரசியல் கருத்து சுதந்திரத்திற்கு மிக முக்கியமான முன்னுதாரணமாக அமையும் என சட்ட நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
