AI துறையில் கலக்கும் Anthropic, தனது IPO-விற்கு முன்பாக புதிய ஷேர் அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதன் ஏழு நிறுவனர்களும் சேர்ந்து கம்பெனியின் **50.1%** ஓட்டிங் உரிமையை தக்கவைக்க முயல்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான Anthropic, பொதுப்பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வரும் நிலையில், தனது நிறுவன அமைப்பில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் ஏழு இணை நிறுவனர்களுக்கும் (Co-founders) சேர்த்து 50.1% ஓட்டிங் உரிமையை வழங்கும் வகையில் புதிய ஷேர் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த அதிகாரம் நீடிக்க வேண்டுமெனில், அந்த ஏழு பேரில் குறைந்தது மூவர் கம்பெனியில் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
நிறுவனர்களின் அறக்கட்டளை முயற்சிகளே இதற்கு முக்கிய காரணம். அவர்கள் தங்கள் சொந்த சொத்தில் 80%-ஐ தானம் செய்ய முடிவெடுத்துள்ளனர். பொதுவாக பங்கைத் தானம் அளிக்கும்போது ஓட்டிங் உரிமையும் குறையும். ஆனால், இந்த புதிய அமைப்பின் மூலம் பொருளாதார உரிமைக்கும், ஓட்டிங் உரிமைக்கும் இடையிலான பிணைப்பைத் துண்டித்து, லாபத்தை ஈட்டும் அதேவேளையில் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியை அவர்கள் தக்கவைக்க உள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு இது என்ன சொல்லுகிறது?
Meta மற்றும் Snap போன்ற நிறுவனங்களில் இருப்பது போன்ற 'Dual-class share' முறைதான் இது. இதனால் நிறுவனர்கள் தங்கள் முடிவுகளைத் தடையின்றி எடுக்க முடியும். அதே நேரத்தில், Long-Term Benefit Trust மூலம் போர்டு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் தொடரும். நிறுவனர்கள் போர்டு இடங்களை 2-ல் இருந்து 3 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். மேலும், ஊழியர்களுக்கு சிறப்பு உரிமை வழங்கப்பட்டு, சில முக்கிய முடிவுகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது. பங்குச் சந்தையில் நுழையும்போது, நிறுவனத்தின் இந்த முடிவு முதலீட்டாளர்களிடையே கலவையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
