செப்டம்பர் 21 முதல் 26 வரையிலான காலக்கட்டத்தில் Trans ACNR Solutions மற்றும் Maharashtra Oil Extractions உள்ளிட்ட 9 நிறுவனங்கள் தங்களின் IPO ஆவணங்களை SEBI-யிடம் சமர்ப்பித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் தற்போது புதிய நிறுவனங்களின் வரவு களைகட்டத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 26-க்குள் 9 நிறுவனங்கள் தாங்கள் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு (IPO) வருவதற்கான ஆரம்பகட்ட ஆவணங்களை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான (SEBI) சமர்ப்பித்துள்ளன.
ரகசிய வழி மற்றும் வெளிப்படையான வழி
இந்த ஒன்பது நிறுவனங்களில், Trans ACNR Solutions நிறுவனம் 'Confidential pre-filing' முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், தனது நிதி விவரங்களை உடனடியாக பொதுவெளியில் காட்டாமல், SEBI மற்றும் பங்குச் சந்தைகளுடன் ஆலோசனை நடத்த முடியும். மற்ற 8 நிறுவனங்களான Maharashtra Oil Extractions, Jagatjit Agri Engineering, மற்றும் Jai Parvati Forge போன்றவை வழக்கமான DRHP (Draft Red Herring Prospectus) முறையில் விண்ணப்பித்துள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் எவ்வளவு நிதி திரட்டுகிறது, புதிய ஷேர்கள் எவ்வளவு என்பது போன்ற தகவல்களை உடனே வெளிப்படையாகக் காட்டுகிறது.
எதற்காக இந்த நிதி திரட்டல்?
இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதன் முக்கிய நோக்கம், தங்களின் வணிகத்தை விரிவுபடுத்துவதும், கடன் சுமையைக் குறைப்பதுமே ஆகும். உதாரணமாக, Maharashtra Oil Extractions நிறுவனம் ₹370 கோடி வரையிலும், Jagatjit Agri Engineering மற்றும் Jai Parvati Forge ஆகிய நிறுவனங்கள் தலா ₹300 கோடி வரையிலும் புதிய ஈக்விட்டி மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன. முக்கியமாக, செயல்பாட்டு மூலதனம் (Working Capital) மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
SEBI-யிடம் விண்ணப்பம் தாக்கல் செய்வது முதல் கட்டம் மட்டுமே. இதற்குப் பிறகுதான் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல் மற்றும் அப்சர்வேஷன் (Observation) கிடைக்கும். சந்தையின் சூழல் மற்றும் மதிப்பீடுகள் (Valuations) சரியாக இருந்தால் மட்டுமே IPO வெற்றி பெறும். எனவே, முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் கடன் அளவு, லாப வரம்பு மற்றும் பணத்தை எங்கே செலவிடப் போகிறார்கள் என்பதைப் பொறுமையாகக் கவனிப்பது அவசியம்.
