இங்கிலாந்தில் பணியாற்றும் வெளிநாட்டு கேர் வொர்க்கர்களுக்கு (Care Workers) ஒரு முக்கிய அறிவிப்பு. மே 2025-க்கு முன்னதாக வந்தவர்கள், **£25,000** சம்பளம் பெற்றால் 5 ஆண்டுகளிலேயே நிரந்தர குடியுரிமை (ILR) பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய உத்தரவின்படி, ஏற்கனவே இங்கிலாந்தில் பணியாற்றி வரும் கேர் வொர்க்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 ஆண்டு நிரந்தர குடியுரிமைப் பாதை தொடர்ந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காலக்கெடுவை 15 ஆண்டுகளாக உயர்த்த அரசு பரிசீலித்து வந்த நிலையில், தற்போது பழைய முறையே தொடரும் என உள்துறை செயலாளர் சபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ளார்.
தகுதிக்கான அளவுகோல்கள் (Eligibility Criteria)
இந்த சலுகையைப் பெற தகுதியுள்ள ஊழியர்கள் £25,000 வருடாந்திர ஊதிய வரம்பைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், மே 2025-க்கு முன்னதாக இங்கிலாந்திற்குள் வந்திருக்க வேண்டும். அரசு இதனை 'Earned Settlement' என்று அழைக்கிறது. அதாவது, சம்பளம், வரி செலுத்துதல் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இந்த நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு என்ன முக்கியத்துவம்?
ஜூலை 22, 2025 முதல் புதிய விண்ணப்பங்களுக்கு கேர் வொர்க்கர் விசா முறை மூடப்பட்டுவிட்டது. எனவே, இந்த சலுகை தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் இந்தியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2025 இறுதிக்குள், இந்தத் துறையில் 1,00,000-க்கும் அதிகமான விசா நீட்டிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
துறை சார்ந்த சவால்கள் மற்றும் ரிஸ்க்
நிவாரண செய்தி கிடைத்தாலும், கேர் துறை சார்ந்த நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பல நிறுவனங்களின் 'ஸ்பான்சர் உரிமங்கள்' (Sponsor Licences) ரத்து செய்யப்படுவது அதிகரித்துள்ளது. உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு குறைவாலும், பணியாளர் ஊதியத் தேவைகளை ஈடுகட்டுவதில் நிறுவனங்கள் சிரமப்படுவதாலும், இந்தத் துறையில் முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் பங்குதாரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சூழல் உள்ளது.
