சர்வதேச மாணவர்களுக்கான CPT விதிகளில் அமெரிக்க அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் UCLA, UC Berkeley போன்ற முன்னணி பல்கலைக்கழங்கள் இன்டர்ன்ஷிப் விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. செப்டம்பர் 15, 2026 முதல் அமலுக்கு வரும் 4 ஆண்டு விசா கால வரம்பு மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security) சர்வதேச மாணவர்களுக்கான பணி அனுமதியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஆகஸ்ட் 24, 2026 அன்று வெளியிடப்பட்ட மெமோவின்படி, பல்கலைக்கழங்கள் இனி Curricular Practical Training (CPT) விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். விதிகளை மீறும் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கெடுபிடிகளால் UCLA மற்றும் UC Berkeley போன்ற முக்கிய பல்கலைக்கழங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதிய CPT விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளன. கல்வி நிறுவனங்கள் தங்கள் உள் கட்டமைப்பு விதிகளைப் புதிய மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
4 ஆண்டு விசா கால வரம்பு
இந்த CPT கட்டுப்பாடு என்பது விசா முறையை முறைப்படுத்தும் அரசின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. செப்டம்பர் 15, 2026 முதல், பழைய 'duration of status' முறை நீக்கப்பட்டு, மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே விசா அனுமதி வழங்கப்படும். இந்த கால வரம்பிற்கு மேல் படிக்கும் மாணவர்கள், அமெரிக்க குடிவரவுத் துறையிடம் (US Citizenship and Immigration Services) தனியாக அனுமதி பெற வேண்டும். இது குறிப்பாக ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் STEM மாணவர்களுக்குப் பெரும் சவாலாக அமையும்.
சமீபத்திய விசா நிலைவரம்
தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தூதரக அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் தீவிர சரிபார்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, உலகளவில் விசா அப்பாயிண்ட்மெண்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விசா ரத்து செய்யப்படும் அபாயம் மற்றும் கல்வித் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகளால் சர்வதேச மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
