வரும் அக்டோபர் 17, 2026 முதல் இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் என்ன?
'Wajib Halal Oktober 2026' என்ற பெயரில் அமலுக்கு வரும் இந்த புதிய சட்டத்தின்படி, இந்திய நிறுவனங்கள் தாங்களாகவே சான்றிதழ் அளிக்கும் முறையை கைவிட்டு, இனி இந்தோனேசியாவின் Halal Product Assurance Organizing Agency (BPJPH) அங்கீகரித்த அமைப்புகள் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும். இதற்கு SIHALAL போர்ட்டலில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும். மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் கேப்சூல்கள் மற்றும் ஆல்கஹால் கலந்த மூலப்பொருட்கள் அனைத்தும் இப்போது கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படும்.
பொருளாதார தாக்கம்
இந்தோனேசியாவுடனான இந்தியாவின் வர்த்தகம் கடந்த 2025-26 நிதியாண்டில் $24.8 பில்லியன் ஆக உள்ளது. இது 2022-23 நிதியாண்டில் இருந்த $38.8 பில்லியன் அளவை விட கணிசமான சரிவாகும். இப்போதைய சூழலில் இந்த புதிய விதிமுறை, குறிப்பாக SME நிறுவனங்களின் லாப வரம்பை (Profit Margins) கடுமையாக பாதிக்கும். சரியான சான்றிதழ் இல்லையெனில், துறைமுகங்களிலேயே சரக்குகள் திருப்பி அனுப்பப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் அபாயம் உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த மாற்றத்தை விரைவாக உள்வாங்கும் நிறுவனங்கள் மட்டுமே இந்தோனேசிய சந்தையில் தொடர்ந்து தடம் பதிக்கும். வரும் காலங்களில் மருந்து மற்றும் விவசாயப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனிப்பது முதலீட்டாளர்களுக்கு அவசியம்.
