சவுதி அரேபியாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, இந்திய தூதரகம் அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், அந்தப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த புதிய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
சவுதி அரேபியாவில் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக இன்ஜினியரிங், கட்டுமானத் துறை (Construction), ஆயில் அண்ட் கேஸ் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். அங்குள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம். மனிதவள மேலாண்மை மற்றும் சப்ளை செயினில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
தூதரகம் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
- அவசர கால எச்சரிக்கைகள் வரும்போது பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
- பால்கனி மற்றும் மாடி வீடுகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.
- வீட்டிற்குள் ஜன்னல்கள் இல்லாத பாதுகாப்பான அறைகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு தொடர்பான காட்சிகளைப் படம் எடுப்பதோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதோ கூடாது.
ரியாத், மக்கா, மதீனா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பவர்கள் 911 என்ற எண்ணுக்கும், பிற பகுதியினர் 998 என்ற எண்ணுக்கும் அழைத்து அவசர உதவி பெறலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. பிராந்திய பதற்றங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தையும் பாதிக்கும் என்பதால், வணிக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தற்காலிகமாக மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.
