உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனா கொண்டு வந்த ஒரு முக்கிய கோரிக்கையை இந்தியா தற்போது தடுத்துள்ளது.
சீனாவின் பார்வையில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில உயர் தொழில்நுட்பப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் சோலார் திட்டங்களுக்கு வழங்கப்படும் உள்நாட்டு சலுகைகள், WTO விதிகளுக்கு எதிரானது. இதனால், இந்த விஷயத்தில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என சீனா கோரியது.
ஆனால், WTO-வின் விவாதக் கூட்டத்தில், இந்தியா இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, தற்போதைக்கு அந்த குழு அமைவதை தடுத்துள்ளது. இது சீனாவின் முதல் கோரிக்கை என்பதால், அடுத்த கூட்டத்தில் சீனா மீண்டும் இதை வலியுறுத்தினால், இந்தியா அதைத் தடுக்க முடியாது.
சீனாவின் வாதப்படி, சுமார் 12 வகை ஐடி பொருட்கள், குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மீது இந்தியா விதித்துள்ள இறக்குமதி வரிகள், WTO ஒப்பந்தங்களுக்கு எதிரானது. இந்த பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்பட வேண்டும் என சீனா கூறுகிறது. ஆனால், இந்தியா தரப்பில், இந்த பொருட்கள் 1996-ல் IT ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது இல்லை என்றும், அதனால் அவற்றின் மீது பூஜ்ஜிய வரி என்ற விதி பொருந்தாது என்றும் வாதிடுகிறது.
மேலும், இந்தியாவின் சோலார் Module Programme-ஐயும் சீனா WTO விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பண மானியம் வழங்கப்படுகிறது. இது வெளிநாட்டு இறக்குமதியாளர்களை பாகுபாடு காட்டுவதாகவும், சட்டவிரோதமான சலுகை என்றும் சீனா கருதுகிறது.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, தங்கள் கொள்கைகள் அனைத்தும் WTO சட்டங்களுக்கு உட்பட்டவை என்றும், நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொள்கைகள் குறித்து சீனா முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என இந்தியா கூறியுள்ளது.
தற்போது, WTO-வின் மேல்முறையீட்டு அமைப்பு (Appellate Body) செயல்படாமல் இருப்பதால், ஒருவேளை இந்த விவகாரம் ஒரு குழுவுக்குச் சென்றாலும், அதன் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இது இந்தியாவிற்கு சாதகமாக அமையலாம்.
