Shenzhen-ல் டெக் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை 'வேலை தொடர்பான மரணம்' என வகைப்படுத்த அதிகாரிகள் மறுத்துள்ளனர். அலுவலக டேஸ்க்கிற்கு அவர் இன்னும் வரவில்லை என காரணம் சொல்லப்பட்டிருப்பது, சீன டெக் நிறுவனங்களின் பணி கலாச்சாரம் குறித்த பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சீனாவின் Shenzhen நகரில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 39 வயது புரோகிராமர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது தற்போது பெரும் சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த சம்பவம் 2026 ஏப்ரல் மாதம் நடந்தது. அவர் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, 11-வது மாடியில் உள்ள தனது டெஸ்க்கிற்குச் செல்லும் வழியில் கழிப்பறையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
அரசின் வினோத வாதம்
கடந்த ஜூலை 2026-ல், Shenzhen மனித வள மற்றும் சமூக பாதுகாப்பு பணியகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரிய இழப்பீட்டு விண்ணப்பத்தை நிராகரித்தது. அவர் தனது கணினியை ஆன் செய்யவில்லை அல்லது தனது இருக்கையில் அமரவில்லை என்பதால், அவர் அந்த நேரத்தில் கடமையில் இல்லை என ஒரு தொழில்நுட்ப காரணத்தைச் சொல்லி அதிகாரிகள் இந்த முடிவை எடுத்தனர். இதன் மூலம், அரசு வழங்க வேண்டிய சுமார் 1.1 மில்லியன் யுவான் இழப்பீட்டுத் தொகையை அவரது குடும்பத்தினர் இழந்துள்ளனர்.
சட்டப்போராட்டம் மற்றும் முதலீட்டாளர் கவலை
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். மனிதத் தேவைகளுக்காகச் செல்லும் இடமும் பணியின் ஒரு பகுதியே என அவர்கள் வாதிடுகின்றனர். சீனாவின் முந்தைய பல தீர்ப்புகள் ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால், இந்த வழக்கில் என்ன மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சம்பவம், புகழ்பெற்ற '996' வேலை கலாச்சாரத்தைப் (காலை 9 முதல் இரவு 9 வரை, வாரத்தில் 6 நாட்கள்) மீண்டும் நினைவூட்டுகிறது. இது கார்ப்பரேட் ஆளுமை (Corporate Governance) மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கடுமையான பணிச்சூழல், ஊழியர்களின் மன உறுதி மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டு ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்பதால், டெக் நிறுவனங்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
