இன்சூரன்ஸ் இணையதளங்களில் பயனர்களை ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 'Dark Patterns' முறைகளை தடை செய்ய IRDAI திட்டமிட்டுள்ளது. தேவையில்லாத தகவல்களை கட்டாயமாக பெறுதல் மற்றும் மறைமுக கட்டணங்கள் இனி தடுக்கப்பட வாய்ப்புள்ளது.
என்ன இந்த 'Dark Patterns'?
ஆன்லைன் இன்சூரன்ஸ் தளங்கள் பலவும் வாடிக்கையாளர்களை திசைதிருப்புவதற்காகவே 'Dark Patterns' எனும் முறையை பயன்படுத்துகின்றன. குறிப்பாக, ஒரு இன்சூரன்ஸ் பாலிசியின் விலையை பார்ப்பதற்கு முன்பே தனிப்பட்ட தகவல்களை கட்டாயப்படுத்தி வாங்குவது, பாலிசி எடுக்கும்போது கடைசி கட்டம் வரை கட்டண விவரங்களை மறைத்து வைப்பது (Drip Pricing) போன்ற செயல்கள் இனி அனுமதிக்கப்படாது.
IRDAI-ன் புதிய திட்டம்
'Recalibrating Economics of Insurance Distribution' என்ற பெயரில் IRDAI ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதில் பயனர்களின் தகவல்களை தேவையில்லாமல் சேகரிக்கும் (Privacy Zuckering) செயல்களை கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலுக்கு வரவிருக்கும் 'Bima Sugam' போர்ட்டலுடன் இது இணைக்கப்படும் போது, காப்பீட்டு சந்தை மேலும் நம்பகத்தன்மை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
இந்த கட்டுப்பாடு டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கலாம். இதுவரை வாடிக்கையாளர்களை எளிதாக கவர பயன்படுத்திய உத்திகள் மாற்றப்பட வேண்டியிருக்கும் என்பதால், நிறுவனங்களின் Customer Acquisition Cost மற்றும் விற்பனை விகிதங்களில் சிறிய மாற்றம் ஏற்படலாம்.
இந்த விவகாரம் குறித்து அக்டோபர் 25-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதன் பிறகே இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். CCPA அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்சூரன்ஸ் துறையிலும் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
