இன்சூரன்ஸ் கம்பெனிகள் பிரீமியம் விவரங்களைக் காட்டுவதற்கு முன், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கட்டாயமாகக் கேட்பதை நிறுத்த IRDAI புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்சூரன்ஸ் துறையில் வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி தகவல்களைப் பெறும் 'டார்க் பேட்டர்ன்' (Dark patterns) முறைக்கு முடிவு கட்ட IRDAI திட்டமிட்டுள்ளது. காப்பீடு தொடர்பான விவரங்கள் அல்லது பிரீமியம் விலையைத் தெரிந்துகொள்ள, ஒரு நபர் தனது பெயர், போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இந்த முறையைத்தான் மாற்றப்போவதாக ரெகுலேட்டர் தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் என்ன?
வாடிக்கையாளர் பாலிசி விவரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன்பே, அவர்களைத் தொடர்புகொண்டு மார்க்கெட்டிங் அழைப்புகளை (Marketing calls) மேற்கொள்வதற்காகவே நிறுவனங்கள் இத்தகைய தகவல்களைப் பெறுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தேவையற்ற தடையாக இருப்பதை IRDAI சுட்டிக்காட்டியுள்ளது. இனி தகவல்கள் பகிரப்படாமலேயே வெளிப்படையான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சவால்
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் பிளாட்பாரங்கள் தங்கள் வெப்சைட் வடிவமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டியிருக்கும். இத்தனை காலம், வெப்சைட் வருபவர்களை 'Lead'-களாக மாற்றி, அதன் மூலம் விற்பனையை அதிகரித்து வந்த நிறுவனங்களுக்கு இது புதிய சவாலை ஏற்படுத்தும்.
இதனுடன், பாலிசி விவரங்கள், க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் (Claim settlement ratio) மற்றும் குறை தீர்க்கும் நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தெளிவான ஒரு பக்க சுருக்கத்தை (One-page summary) வழங்கவும் IRDAI அறிவுறுத்தியுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
