பல ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஏர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) வசதி இருந்தாலும், அதற்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் லிமிட்டுகள் உள்ளன. மருத்துவ அவசர காலங்களில் குடும்பங்கள் பெரிய அளவில் நிதி நெருக்கடிக்கு ஆளாவதைத் தவிர்க்க, உங்கள் பாலிசியில் உள்ள நிபந்தனைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்.
தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை உயிர்காக்கும் வரப்பிரசாதம். ஆனால், காப்பீட்டுத் திட்டங்களில் இதற்கான கவரேஜ் பெரும்பாலும் போதுமானதாக இருப்பதில்லை. பல பாலிசிகள் ஏர் ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை மட்டுமே உச்சவரம்பு (Sub-limit) நிர்ணயிக்கின்றன.
பாலிசி கட்டமைப்பும் நிதிச் சுமையும
சில பாலிசிகளில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி 'பேஸ் சம் இன்சூர்டு' (Base Sum Insured) தொகையிலேயே இணைக்கப்பட்டிருக்கும். இதனால் பெரிய மருத்துவ சிகிச்சையின் போது பாலிசி தொகை முழுமையாக தீர்ந்துவிட்டால், ஏர் ஆம்புலன்ஸ் செலவுக்கு பணம் கிடைக்காது. அதே சமயம், HDFC ERGO-வின் 'Optima Secure' போன்ற சில பாலிசிகள் அடிப்படைத் தொகைக்கு மேலாக கூடுதல் பாதுகாப்பு அடுக்கு வழங்குகின்றன. எனவே, உங்கள் பாலிசியின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்ப்பது முக்கியம்.
நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் நடைமுறைகள்
காப்பீட்டு நிறுவனங்கள் ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு மிகக் கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளன. பல நிறுவனங்கள், ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்வதற்கு முன்பே தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் (Prior Intimation) என்று கட்டாயப்படுத்துகின்றன. IFFCO-TOKIO போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட நெட்வொர்க் வெண்டார்களைப் பயன்படுத்துகின்றன. அங்கீகரிக்கப்படாத வெண்டார்களைத் தேர்வு செய்தால் கிளைம் (Claim) நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
மருத்துவத் தேவை மற்றும் ஆவணங்கள்
'மெடிக்கல் நெசசிட்டி' (Medical Necessity) எனப்படும் மருத்துவத் தேவை குறித்த சான்று மிக அவசியம். நோயாளிக்கு ஏன் சாலை மார்க்கமாக செல்ல முடியாது என்பதற்கான காரணத்தை மருத்துவர்கள் தெளிவாகச் சான்றளிக்க வேண்டும். மேலும், கிளைம் சமர்ப்பிக்க சில நிறுவனங்கள் 30 நாட்கள் மட்டுமே காலக்கெடு வழங்குகின்றன. IRDAI விதிகள் இருந்தாலும், முழுமையான மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு பாலிசிதாரருடையதே.
டிராவல் இன்சூரன்ஸ் (Travel Insurance) போதுமானதா?
பொதுவான பயணக் காப்பீடுகள் (Domestic Travel Insurance) பெரும்பாலும் ஏர் ஆம்புலன்ஸ் செலவுகளை ஈடு செய்யாது. இதற்கு 'எமர்ஜென்சி மெடிக்கல் எவாகுவேஷன்' (Emergency Medical Evacuation) எனும் பிரத்யேக 'Add-on' தேவை. ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் விமானத்தின் வகை மற்றும் மருத்துவக் கருவிகளைப் பொறுத்து மாறுபடும் என்பதால், உங்கள் பாலிசி ஆவணங்களை முழுமையாகப் படிப்பது நிதித் திட்டமிடலுக்கு அவசியமாகும்.
