உள்நாட்டு உற்பத்தி சூடுபிடிக்கும்
McKinsey & Company வெளியிட்டுள்ள 'Wired for Growth: India's Electrical Equipment Opportunity' என்ற அறிக்கையின்படி, இந்தியாவின் எலக்ட்ரிக்கல் உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி 2025-ல் சுமார் $50 பில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது 2035-க்குள் $195 பில்லியன் முதல் $235 பில்லியன் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், உள்நாட்டு நுகர்வு $170 பில்லியன் முதல் $205 பில்லியன் வரை செல்லும் என்றும், ஏற்றுமதி $60 பில்லியன்-க்கு மேல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சிக்கான முக்கிய காரணிகள்
இந்தத் துறையின் வளர்ச்சி, ஆண்டுக்கு 11-13% என்ற அளவில் 2035 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேசிய மின்மயமாக்கல் (electrification) அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) பயன்பாட்டில் வேகம், பவர் எலக்ட்ரானிக்ஸ் (power electronics) தேவையின் உயர்வு, மற்றும் வலுவான ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதற்கு முன் IT சேவைகள் மற்றும் ஆட்டோ காம்போனென்ட்ஸ் துறைகளில் இந்தியா அடைந்த வெற்றியே, எலக்ட்ரிக்கல் உபகரணத் துறையிலும் சாத்தியம் என McKinsey சுட்டிக்காட்டுகிறது.
அதிகரிக்கும் இறக்குமதி: ஒரு எச்சரிக்கை மணி
2025 நிதியாண்டில் உள்நாட்டு நுகர்வு $59 பில்லியன் ஆக உயர்ந்தாலும், இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிக்கை எச்சரிக்கிறது. 2020-ல் 22% ஆக இருந்த இந்த நிலை, 2025-ல் 33% ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2035-க்குள் இறக்குமதி 70%-க்கு மேல் சென்று, $130 பில்லியன்-க்கும் அதிகமான உற்பத்தி பற்றாக்குறை ஏற்படலாம்.
இதைச் சமாளிக்க, பவர் எலக்ட்ரானிக்ஸ், பேட்டரிகள், ஏசி கம்ப்ரஸர்கள், சோலார் PV செல்கள் மற்றும் மாட்யூல்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள், மற்றும் கேபிள்கள் போன்ற முக்கிய பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுமயமாக்கல் (Localization) வாய்ப்புகள்
பவர் எலக்ட்ரானிக்ஸ், பேட்டரிகள், சோலார் PV மற்றும் பல்வேறு துணை பாகங்கள் போன்ற பிரிவுகளில் உள்நாட்டுமயமாக்கல் (localization) மூலம் இறக்குமதி சார்புநிலையை 2035-க்குள் 14% க்கும் கீழ் குறைக்க முடியும் என McKinsey கூறுகிறது. தற்போதுள்ள அணுகுமுறைகள் போதாது என்றும், உள்நாட்டு உற்பத்தி திறனை கணிசமாக அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் McKinsey பார்ட்னர் பவேஷ் மிட்டல் (Bhavesh Mittal) தெரிவித்துள்ளார்.
எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உபகரணங்கள், சப்மரைன் மற்றும் அதிவேக ரயில் போன்ற சிறப்புப் பயன்பாடுகளுக்கான உயர்நிலை கேபிள்கள், மின்சார கட்டத்தை நிலைப்படுத்தும் தொழில்நுட்பம் (grid stabilization technology), மற்றும் பவர் சாப்ட்வேர் (power software) போன்ற புதிய துறைகள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உபகரணங்கள் மற்றும் உயர்நிலை கேபிள்கள் சந்தை மட்டுமே 2035-ல் $350-$400 பில்லியன் உலகளாவிய வாய்ப்பை உருவாக்கும். இந்தக் குறிக்கோளை அடைய, கொள்கை வகுப்பாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இணைந்து செலவு போட்டித்திறன், தொழில்நுட்பத் திறன்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது.
