2026 நிதியாண்டை Astral நிறுவனம் மிகச் சிறப்பான நான்காம் காலாண்டு முடிவுகளுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ₹179 கோடி இருந்த நெட் ப்ராஃபிட், இந்த முறை 19% அதிகரித்து ₹213 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயைப் பொறுத்தவரை, 24% வளர்ச்சி கண்டு ₹2,089 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது ₹1,681 கோடியாக இருந்தது.
இதேபோல், வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனீட்டுக்கு முந்தைய லாபம் (EBITDA) 27% உயர்ந்து ₹383 கோடியை தொட்டுள்ளது. கம்பெனியின் EBITDA மார்ஜின் 18% இல் இருந்து 18.3% ஆக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனில் (Operational Efficiency) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
மேலும், பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு பங்கிற்கு ₹2.50 இறுதி டிவிடெண்டாக (Final Dividend) அறிவித்துள்ளது Astral. பொதுக் கூட்ட நாள் மற்றும் பணம் செலுத்தும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (MD) சந்தீப் இன்ஜினியர் (Sandeep Engineer) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது புதிய பதவிக்காலம் ஏப்ரல் 1, 2027 முதல் தொடங்கும்.
இந்த சிறப்பான நிதிநிலை முடிவுகள் வெளியாகியிருந்தாலும், Astral பங்கின் விலை இன்று 0.33% சரிந்து ₹1,545.70 ஆக வர்த்தகமானது. அதேசமயம், சந்தையின் முக்கிய குறியீடான NSE Nifty 50 சிறிய ஏற்றத்துடன் காணப்பட்டது.