குழந்தைகளிடம் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளின் வீரியம் குறைந்து வருவதாக புதிய ஆய்வு அதிர்ச்சி தகவல் தருகிறது. இது மருத்துவமனைகளின் செயல்பாட்டையும், பார்மா கம்பெனிகளின் ஆராய்ச்சி முன்னுரிமையையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.
JAMA Pediatrics வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள் மருத்துவ உலகிற்கு பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளன. 0 முதல் 18 வயதுடைய குழந்தைகளிடம் பாக்டீரியாக்களுக்கு எதிரான மருந்துகள் (Antimicrobial Resistance - AMR) வேலை செய்யாத சூழல் உலகளவில் அதிகரித்துள்ளது. சுமார் 82 நாடுகளில் 1,06,000க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களை ஆய்வு செய்ததில், நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற பொதுவான நோய்களை குணப்படுத்துவது சவாலாக மாறியுள்ளது.
மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உள்ள நோயாளிகளுக்கு 'Watch' மற்றும் 'Reserve' வகை மருந்துகள் கூட வேலை செய்யாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகளின் சிகிச்சை காலம் நீடிக்கிறது. சாதாரண மருந்துகள் வேலை செய்யாதபோது, நவீன கண்டறியும் கருவிகள் மற்றும் அதிக விலை கொண்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது தனியார் மருத்துவமனை நிறுவனங்களின் லாப வரம்பில் (Profit Margins) அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பார்மா கம்பெனிகள் என்ன செய்ய வேண்டும்?
பார்மா நிறுவனங்களுக்கு இது ஒரு கத்திமேல் நடக்கும் சூழல். Klebsiella மற்றும் Acinetobacter baumannii போன்ற வீரியமிக்க பாக்டீரியாக்களை அழிக்க புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், குழந்தைகளின் உடல்நிலைக்கேற்ப மருந்துகளை உருவாக்குவது மற்றும் அதற்கான கிளினிக்கல் ட்ரையல்ஸ் (Clinical Trials) நடத்துவது பொருளாதார ரீதியாக அதிக செலவு பிடிக்கும் வேலை. பெரியவர்களுக்கான மருந்து சந்தையை விட, குழந்தைகளுக்கான சந்தை சிறியதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சந்தை மற்றும் முதலீட்டு பார்வை
எதிர்காலத்தில், ஆன்டிபயாடிக் மருந்து பயன்பாட்டிற்கு அரசு மற்றும் உலக சுகாதார அமைப்புகள் கடுமையான விதிமுறைகளை கொண்டு வரும். வெறும் மருந்துகளை விற்பனை செய்யும் மாடலில் இருந்து, கண்காணிப்பு மற்றும் துல்லியமான சிகிச்சை (Surveillance-based treatment) மாடலுக்கு நிறுவனங்கள் மாற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எந்த நிறுவனங்கள் இந்த புதிய சவால்களை எதிர்கொண்டு, குழந்தைகளுக்கென பிரத்யேகமான மருந்துகளை சந்தைக்கு கொண்டு வருகிறதோ, அந்த நிறுவனங்களே எதிர்காலத்தில் துறையில் ஆதிக்கம் செலுத்தும்.
