இரவில் தாமதமாக விழித்திருப்பவர்கள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசம் (Metabolism) பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் என்று 'Frontiers in Nutrition' இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. உணவு நேரம், கலோரி அளவுக்கு இணையாக முக்கியமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரவு நேர உணவுப் பழக்கமும் உடல் நலமும்
'Frontiers in Nutrition' இதழில் வெளியான இந்த புதிய ஆய்வு, ஒருவரின் உடல் கடிகாரம் (Biological Clock) அல்லது 'க்ரோனோடைப்' (Chronotype) எவ்வாறு உடல் நலத்தை பாதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 287 பெண்களை (வயது 18 முதல் 45 வரை) ஆய்வு செய்தனர். இதில், இரவில் தாமதமாக விழித்திருந்து பழக்கப்பட்டவர்கள் ('நைட் அவுல்ஸ்'), காலையில் சீக்கிரம் எழுபவர்களுடன் ஒப்பிடும்போது, உடலில் கொழுப்பு சேர்வதற்கும், மெட்டபாலிக் பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உணவு நேரமும் மெட்டபாலிசமும்
இந்த ஆய்வில், இரு குழுவினரின் மொத்த தினசரி கலோரி உட்கொள்ளல் ஒரே மாதிரியாக இருந்தாலும், உணவு உட்கொள்ளும் நேரம் கணிசமாக வேறுபட்டுள்ளது. 'நைட் அவுல்ஸ்' குழுவினர் காலையில் குறைவான ஊட்டச்சத்துக்களையும், மாலையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அதிக ஆற்றல் அடர்த்தியான (Energy-dense) உணவுகளையும், குறிப்பாக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. உடலுக்கு ஓய்வு தேவைப்படும் நேரத்தில், இப்படி ஆற்றல் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மெட்டபாலிசத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த மெட்டபாலிக் பிரச்சனைகள், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், கொழுப்பு அளவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி, மெட்டபாலிக் நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும் அபாயம் ('Android-to-Gynoid Ratio') அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
'க்ரோனோநியூட்ரிஷன்' - ஒரு தடுப்பு முறை
இந்தக் கண்டுபிடிப்புகள், 'க்ரோனோநியூட்ரிஷன்' (Chrononutrition) எனப்படும் வளர்ந்து வரும் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இது, உடலின் இயற்கையான சுழற்சியும் உணவுப் பழக்கமும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை ஆராய்கிறது.
ஆராய்ச்சியாளர்களின்படி, உணவு நேரத்தை மாற்றுவது, உடல் நலனை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட உணவுகளைக் குறைப்பது, உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க உதவும்.
வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் போக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கு, இந்த ஆய்வு ஒரு முக்கிய செய்தியைத் தருகிறது. இனிவரும் காலங்களில், உணவுப் பொருட்கள் மற்றும் கலோரி அளவை மட்டும் கவனிக்காமல், உணவு உண்ணும் நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
