FSSAI அறிவிப்புக்கு சட்ட சவால்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடந்த ஏப்ரல் 16, 2026 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அஸ்வகந்தா இலைகளை எந்த வடிவத்திலும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த அறிவிப்பை உடனடியாக எதிர்த்து, அமெரிக்காவைச் சேர்ந்த Kerry Group மற்றும் அதன் இந்திய துணை நிறுவனம், Sami-Sabinsa Group Ltd, K Patel Phyto Extractions Pvt Ltd, SA Herbal Bioactives LLP, Sakti Naturals Pvt Ltd, Unicorn Natural Products Pvt Ltd, OmniActive Health Technologies Ltd, மற்றும் Konark Herbals and Healthcare Pvt Ltd போன்ற பல நிறுவனங்கள் களமிறங்கின.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
இந்த வழக்கு கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வுக்கு முன் வந்தது. நீதிபதி SR கிருஷ்ணா குமார் தலைமையிலான அமர்வு, கடந்த மே 12, 2026 அன்று, FSSAI-யின் அறிவிப்பு மற்றும் உத்தரவுக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது. மனுதாரர்களான நிறுவனங்கள் வழக்கு விசாரணையில் இருக்கும் வரை, அஸ்வகந்தா இலைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த தடையை மாற்றியமைக்கவோ அல்லது ரத்து செய்யவோ மத்திய அரசு மற்றும் FSSAI-க்கு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
FSSAI-யின் இந்த அறிவிப்பு, உணவுப் பாதுகாப்புச் சட்டமான 2006-க்கு முரணானது என இலைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வாதிட்டன. மேலும், அஸ்வகந்தா இலைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், 2016-ஆம் ஆண்டு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், வெறும் அறிவிப்பு மட்டும் போதாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் தயாரிப்புகளில் அஸ்வகந்தா இலைகளைப் பயன்படுத்தி வருவதாகவும், FSSAI-யின் இந்த நடவடிக்கை தங்களின் அரசியலமைப்பு வழங்கியுள்ள வர்த்தக உரிமையைப் பறிப்பதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் 8, 2026 அன்று நடைபெற உள்ளது.
