இந்திய ஹெல்த்கேர் பங்குகளில் கடந்த 14 மாதங்களாக விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI), இப்போது மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஜூலை முதல் செப்டம்பர் பாதி வரை மட்டும் சுமார் **₹15,800 கோடி** முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 14 மாதங்களாக ஹெல்த்கேர் துறையிலிருந்து விலகி இருந்த FPI-கள், தற்போது மீண்டும் பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2026 வரை சுமார் ₹40,160 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியிருந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் பாதியிலான குறுகிய காலத்தில் மட்டும் ₹15,800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் வெறும் 'டிஃபென்சிவ்' முதலீடு மட்டுமல்ல, வலுவான வணிக காரணிகளும் உள்ளன. குறிப்பாக, உள்நாட்டு பார்மா நிறுவனங்களின் வளர்ச்சி, அமெரிக்க ஜெனரிக் மார்க்கெட்டில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, நிஃப்டி ஹெல்த்கேர் இண்டெக்ஸ் இந்த ஆண்டில் இதுவரை 15% உயர்ந்துள்ளது.
எதில் முதலீடு ஈர்க்கிறது?
நிறுவனங்கள் இப்போது CDMO (Contract Development and Manufacturing Organizations) மற்றும் GLP-1 போன்ற புதிய சிகிச்சை முறைகள் சார்ந்த பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. அதேபோல், நாராயண ஹிருதயாலயா (Narayana Hrudayalaya) போன்ற மருத்துவமனை நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதும் முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
எல்லாம் நன்றாக இருந்தாலும், சில செக்மெண்ட்களில் வேல்யுவேஷன் (Valuation) மிக அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக CDMO மற்றும் CRAMS போன்ற துறைகளில் பங்குகள் அதிக விலையில் வர்த்தகமாகின்றன. இதனால், சன் பார்மா (Sun Pharmaceutical), சிப்லா (Cipla), டோரண்ட் பார்மா (Torrent Pharmaceuticals) மற்றும் திவிஸ் லேப் (Divi’s Laboratories) போன்ற வலுவான நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்வது நல்லது என்று ஆலோசனை வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில், வெறும் செக்டார் சென்டிமென்டை மட்டும் பார்க்காமல், நிறுவனங்களின் லாப வளர்ச்சி (Earnings Quality) மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை உன்னிப்பாக கவனிப்பது மிக முக்கியம்.
