தெலங்கானா மாநிலத்திற்கு சொந்தமான நிலக்கரி நிறுவனமான Singareni Collieries, இனி லித்தியம், தங்கம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்களை தேடும் பணியில் இறங்குகிறது. நிலக்கரி தேவை எதிர்காலத்தில் குறையக்கூடும் என்பதால், இந்த மாற்றத்தை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தெலங்கானா அரசு, மாநிலத்திற்கு சொந்தமான நிலக்கரி நிறுவனமான Singareni Collieries Company Limited (SCCL)-க்கு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி நிலக்கரி மட்டும் இன்றி லித்தியம், தங்கம், தாமிரம் மற்றும் வெனடியம் போன்ற கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணிகளிலும் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏன் இந்த அதிரடி மாற்றம்?
இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மாறி வரும் சூழலில், சூரிய சக்தி மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் நிலக்கரிக்கான தேவை குறைய வாய்ப்புள்ளதால், நிறுவனம் புதிய வருவாய் வழிகளை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
செலவு குறைப்பு மற்றும் இலக்குகள்
நிறுவனத்தில் 75,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், உற்பத்தி செலவுகளை கணிசமாகக் குறைக்க நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் போட்டியாளர்களுக்கு நிகராக, நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை (Operational Efficiency) மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
சர்வதேச ஆலோசனைகள்
புதிய சுரங்கத் துறைகளில் நுழையும் போது ஏற்படும் தொழில்நுட்ப இடர்பாடுகளை தவிர்க்க, சர்வதேச ஆலோசகர்களை பணியமர்த்த அரசு பரிந்துரைத்துள்ளது. பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு முன்னதாக, சர்வதேச நிபுணர்கள் மூலம் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் (Feasibility Studies) நடத்தப்படும்.
இது தவிர, மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் நேரடி ஒதுக்கீடு மூலம் நிலக்கரி சுரங்கங்களை பெற SCCL பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போதைய நிலக்கரி ஒப்பந்தங்களை ஆய்வு செய்து, உற்பத்தியை சீரமைக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு வலு சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
