மின்சாரத் துறையின் தரவுகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு புதிய 'National Electricity Data Sharing Framework'-ஐ கொண்டு வந்துள்ளது. இது AI தொழில்நுட்பம் மூலம் கிரிட் செயல்திறனை அதிகரிக்க உதவும் அதேவேளையில், சைபர் பாதுகாப்பு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மின்சாரத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு புதிய 'National Electricity Data Sharing Framework'-ஐ இந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. மின் உற்பத்தி, கடத்தல் (Transmission) மற்றும் விநியோகம் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்தத் துறையில், இதுவரை சிதறி கிடந்த தரவுகளை ஒரே இடத்தில் திரட்டுவதே இதன் முக்கிய நோக்கம்.
AI மூலம் கிரிட் மேலாண்மை
இந்தத் திட்டத்தின் கீழ் 'National Electricity Data Portal' (NEDP) உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தரவுகளை வைத்து ஸ்டார்ட்-அப்கள் மற்றும் மின்சார நிறுவனங்கள் AI மாடல்களை உருவாக்கலாம். இது மின் தேவை கணிப்பு (Demand forecasting), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மற்றும் மின் கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தும்.
பாதுகாப்பு மற்றும் சவால்கள்
டிஜிட்டல் மயமாகும் அதே வேளையில், இதில் சைபர் தாக்குதல் அபாயங்களும் உள்ளன. இதை எதிர்கொள்ள, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட AI மாடல்களின் சோர்ஸ் கோடுகளை (Source codes) அரசு தன் வசம் வைத்திருக்கும். மேலும், ஏஐ டேட்டா சென்டர்களின் அதிகரிப்பால் மின் கட்டமைப்புக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதைக் கையாள தனியாக ஒரு டேட்டா சென்டர் கொள்கையை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
தற்போது இந்தத் திட்டத்தில் மாநில மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பது தன்னார்வமாக (Voluntary) மட்டுமே உள்ளது. பெரிய நிறுவனங்கள் எவ்வளவு ஆர்வமாக இந்த போர்ட்டலில் இணைகிறார்கள் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். எனவே, பெரிய மின் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் புதிய கொள்கைகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
