சீனா சோலார் தயாரிப்பு கருவிகளை ஏற்றுமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் உள்ளூர் சோலார் இங்காட் (Ingot) மற்றும் வேஃபர் (Wafer) உற்பத்தி இலக்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம், சோலார் பேனல் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 12 நவீன தொழில்நுட்பங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இதில் பாலிசிலிக்கான் மற்றும் வேஃபர் தயாரிக்க உதவும் முக்கிய இயந்திரங்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இது இந்தியாவின் சோலார் சப்ளை செயினில் ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
இங்காட் (Ingot) தயாரிப்பில் சிக்கல்
தற்போது இயங்கி வரும் சோலார் யூனிட்களுக்கு பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், அடுத்தகட்ட உற்பத்திக்கான கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். சோலார் வேஃபர் தயாரிப்பதற்கான அடிப்படை கல்லான 'இங்காட்' தயாரிப்பு இயந்திரங்களை சீனாவிலிருந்து தான் பெரும்பாலான நாடுகள் வாங்குகின்றன. சீனா தவிர மற்ற நாடுகளில் இத்தகைய உயர்தர இயந்திரங்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் இங்காட் தயாரிப்பதில் சிரமத்தை சந்திக்கலாம்.
2028 இலக்கு என்னவாகும்?
இந்திய அரசின் புதிய எரிசக்தி அமைச்சகத்தின்படி, பிப்ரவரி 2028-க்குள் சோலார் திட்டங்களுக்கு தேவையான இங்காட் மற்றும் வேஃபர்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த இலக்கை அடைய பல நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை செய்துள்ளன. ஆனால் புதிய சீனக் கட்டுப்பாடுகள், இந்த இயந்திரங்களை வாங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதோடு, செலவையும் (Capital Spending) அதிகரிக்கச் செய்யும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இப்போது ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொழில்நுட்ப கூட்டுறவை தேடும் நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்படலாம். செங்குத்து ஒருங்கிணைப்பு (Vertical Integration) செய்ய முயற்சிக்கும் நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margin) இந்த சப்ளை செயின் சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, சோலார் நிறுவனங்கள் இந்த தடையை எவ்வாறு சமாளிக்கின்றன மற்றும் பிற நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனவா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
