லாபத்திற்குப் பின் பங்குச் சந்தை லட்சியம்
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வருவதால், பீகாரின் மின்சார விநியோக நிறுவனங்கள் தற்போது பங்குச் சந்தையில் நுழைய தயாராகி வருகின்றன. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், மேம்பட்ட வருவாயைப் பயன்படுத்தி நிதிச் செயல்திறனை மேலும் அதிகரிப்பதாகும். ஆற்றல் துறைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், முறையான கொள்கை அமலாக்கம், வலுவான அரசியல் ஆதரவு மற்றும் கடந்த பத்தாண்டுகளில் மாநிலம் செய்துள்ள ₹75,000 கோடி முதலீடு ஆகியவற்றின் காரணமாக இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
நிதிநிலையில் பெரும் முன்னேற்றம்
வடக்கு பீகார் மின் விநியோக நிறுவனம் (North Bihar Power Distribution Company - NBPDC), 2024-25 நிதியாண்டில் ₹1,338.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டான 2023-24 இல் இது ₹1,105.9 கோடி ஆக இருந்தது. அதேபோல், தெற்கு பீகார் மின் விநியோக நிறுவனம் (South Bihar Power Distribution Company - SBPDC), 2024-25 இல் ₹744 கோடி நிகர லாபம் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு ₹63.5 கோடி லாபத்திலிருந்து பெரும் ஏற்றமாகும். மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் REC Ltd நடத்திய 66 விநியோக நிறுவனங்கள் இடையேயான தரவரிசையில், NBPDC 13வது இடத்தையும், SBPDC 24வது இடத்தையும் பிடித்துள்ளன.
அணுமின் திட்டங்கள் மற்றும் எதிர்கால முதலீடுகள்
மின்சார விநியோகத்துடன் மட்டுமல்லாமல், பீகார் அரசு அணுமின் திட்டங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறது. குறைந்தபட்சம் 2 அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டத்தையும் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக NTPC மற்றும் Nuclear Power Corporation நிறுவனங்கள், நவாடா, பாங்கா, மற்றும் சிவான் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன. நிலம் மற்றும் நீர் வசதிகளை உறுதி செய்வதன் மூலம் இந்த திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். எதிர்கால முதலீடுகளுக்கு நிதியைத் திரட்ட, மின்சாரத் துறை நிறுவனங்களை பட்டியலிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பீகார் மின்சாரப் பரிமாற்ற நிறுவனத்தை (Bihar Power Transmission Company) 2026-27 நிதியாண்டில் பட்டியலிட ஒரு merchant banker-ஐ நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.