அமெரிக்காவின் PERM விசா நடைமுறைகளில் 2004-க்கு பிறகு முதல் முறையாக முக்கிய மாற்றங்களை கொண்டுவர White House அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு மற்றும் செயல்பாட்டு செலவுகளை உயர்த்த வாய்ப்புள்ளது.
அமெரிக்க அரசு PERM (Program Electronic Review Management) எனப்படும் தொழிலாளர் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மாற்றியமைக்க இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்காவில் கிரீன் கார்டு (Green Card) பெறுவதற்கான முதல் படியாகும். 2004-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இத்தனை ஆண்டுகளில் செய்யப்பட முதல் பெரிய மாற்றம் இதுவாகும்.
இந்திய IT நிறுவனங்களுக்கு பாதிப்பு என்ன?
Infosys மற்றும் Tata Group போன்ற இந்திய நிறுவனங்கள் தங்களது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க, H-1B மற்றும் கிரீன் கார்டு மூலமாகத்தான் திறமையாளர்களை அனுப்பி வருகின்றன. புதிய விதிகள் மூலம், வெளிநாட்டு பணியாளர்களை எடுக்கும் முன், அந்த வேலைக்கு உள்ளூர் அமெரிக்கர்கள் கிடைக்கவில்லை என்பதை நிறுவனங்கள் உறுதியாக நிரூபிக்க வேண்டும். இது ஆள்சேர்ப்பு செயல்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை உருவாக்கும்.
அதிகரிக்கும் செலவுகள் (Compliance Costs)
ஏற்கனவே Infosys மற்றும் Tata Group போன்ற நிறுவனங்கள் மீது சில ஆட்சேர்ப்பு விதிமீறல் புகார்கள் எழுந்தன. இப்போது நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படுவதால்:
- அதிகரிக்கும் செலவுகள்: கூடுதல் ஆவணங்கள் மற்றும் தணிக்கைகளால் நிர்வாகச் செலவுகள் உயரும்.
- செயல்பாட்டு சுமை: புதிய விதிமுறைகள் மற்றும் தணிக்கைகளால் ஆள்சேர்ப்பு காலம் அதிகரிக்கும்.
- லாப வரம்பு (Profit Margins): இந்த கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாவிட்டால், நிறுவனங்களின் லாபத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
முதலீட்டாளர்கள் என்ன கவனிக்க வேண்டும்?
ஐடி துறை ஏற்கனவே மந்தமான தேவையை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த விசா விவகாரம் கூடுதல் சவாலாக பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் உள்ளூர் ஆள்சேர்ப்பை அதிகரிப்பதையோ அல்லது ஆட்டோமேஷனில் முதலீடு செய்வதையோ கட்டாயமாக்க வேண்டியிருக்கும். அடுத்த 30 முதல் 60 நாட்களுக்குள் Federal Register-ல் இந்த வரைவு விதிகள் வெளியிடப்படும். அதன் பிறகு பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு, இறுதி விதிகள் அமலுக்கு வரும். இந்த காலகட்டத்தில் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் செலவு மாற்றங்களை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
