உலக வர்த்தகம் அதல பாதாளத்தில்?
உலக வர்த்தக அமைப்பின் (WTO) புதிய கணிப்புகள், உலகப் பொருட்கள் வர்த்தகத்தின் (merchandise trade volume) வளர்ச்சி வரும் 2026 ஆம் ஆண்டில் 1.9% ஆக குறையும் எனத் தெரிவிக்கின்றன. இது 2025 ஆம் ஆண்டில் இருந்த 4.6% என்ற கணிப்பிலிருந்து பெரும் சரிவாகும். இதைத் தொடர்ந்து, சேவைகள் வர்த்தகமும் (services trade) 5.3% லிருந்து 4.8% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் உலகப் பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம் சுமார் 4.7% வளர்ந்து, உலக GDP வளர்ச்சியை ( 2.9%) விட வேகமாக இருந்த நிலையில், இது ஒரு பெரிய வீழ்ச்சியாகும்.
மேற்கு ஆசியாவின் தாக்கமும் ஹார்முஸ் ஜலசந்தியும்
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் (geopolitical) பதற்றங்கள். பிராந்திய ஸ்திரமின்மை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பொருட்கள் வர்த்தக வளர்ச்சி 0.5% புள்ளிகள் குறையலாம். சேவைகள் வர்த்தகத்தில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும், குறிப்பாக சர்வதேச போக்குவரத்து மற்றும் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களால் 0.7% புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது.
மிக முக்கியமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. மோதல்கள் தீவிரமடைந்த பிறகு, இந்த முக்கிய நீர்வழித்தடத்தில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை தினசரி 138 லிருந்து கிட்டத்தட்ட பூஜ்யமாக குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் விலைகள் உயர்வது மட்டுமின்றி, போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகளும் அதிகரித்து, உலக விநியோகச் சங்கிலியில் (global supply chains) பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது எரிசக்திக்கு மட்டுமல்லாமல், உரங்கள் போன்ற பொருட்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உலக உர ஏற்றுமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இந்த மோதல் நீடித்தால், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் நிரந்தரமாக உயரக்கூடும், முக்கிய கப்பல் மற்றும் விமானப் பாதைகள் பாதிக்கப்படலாம். இதனால், மேற்கு ஆசியாவின் சேவைகள் ஏற்றுமதி 9.2% குறையும் என்றும், உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை 15.7% புள்ளிகள் குறைக்கும் என்றும் WTO கணித்துள்ளது.
AI பொருட்களின் ஒரு சிறிய நம்பிக்கை
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பொருட்களின் வர்த்தகம் தொடர்ந்து வலுவாக இருப்பது ஒரு நேர்மறையான விஷயமாகும். 2025 ஆம் ஆண்டில் வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் வரிகள் அதிகரித்த தாக்கத்தை இந்த AI வர்த்தக வளர்ச்சி ஓரளவு ஈடு செய்தது. இந்த AI தேவை தொடர்ந்தால், அது எதிர்பார்க்கப்படும் மந்தநிலையை ஓரளவு ஈடுசெய்ய உதவும்.