அமெரிக்காவின் புதிய H-1B விசா விதிமுறைகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் நெருக்கடியை சந்திக்கின்றன. ஊழியர் பணிநீக்கம் (Layoff) மற்றும் கூடுதல் கட்டணங்கள் காரணமாக, நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள புதிய H-1B விசா விதிமுறைகள் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பாரம்பரிய வணிக மாதிரியை (Business Model) பெரிய அளவில் மாற்றியமைக்கக் கூடியதாக உள்ளது. புதிய உத்தரவின்படி, வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அமெரிக்காவில் தங்கள் சொந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்த வரலாறு குறித்து தணிக்கை (Audit) செய்யப்பட வேண்டும்.
கட்டண உயர்வு மற்றும் தாக்கம்
செப்டம்பர் 2027 வரை சில குறிப்பிட்ட வகை H-1B மனுக்களுக்கு $100,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள H-1B விசாக்களில் சுமார் 71% இந்தியர்களிடம் இருப்பதால், இந்த புதிய கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதுவரை இந்தியாவிளிருந்து திறமையாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி பணியாற்றி வந்த முறை, இப்போது செலவு மிக்கதாக மாறியுள்ளது.
மார்ஜின் (Margin) மீதான அழுத்தம்
இந்த சவால்களை எதிர்கொள்ள இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவிலேயே உள்ளூர் மக்களை வேலைக்கு எடுக்கும் முறையை (Local Hiring) ஊக்குவித்து வருகின்றன. இருப்பினும், இது நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை (Operating Costs) அதிகரிக்கச் செய்கிறது. அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு இந்தியாவை விட அதிக சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், நிறுவனங்களின் லாப வரம்பில் (Profit Margin) அழுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் இனி ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில், விசா சார்ந்த செலவுகள் மற்றும் உள்ளூர் பணியமர்த்தல் மூலம் எவ்வாறு லாபத்தை தக்கவைக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
