அமெரிக்காவில் வேலை இழக்கும் H-1B மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாள் அவகாசத்தை (Grace Period) ரத்து செய்வது குறித்து வெள்ளை மாளிகை ஆய்வு செய்துள்ளது. இது இன்னும் சட்டமாக மாறவில்லை என்றாலும், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security), தற்போது நடைமுறையில் உள்ள 60 நாள் கிரேஸ் பீரியடை ரத்து செய்ய முன்மொழிந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ள இந்த விதியின்படி, ஒருவர் வேலையை இழந்த பிறகு புதிய வேலை தேடவோ அல்லது விசா நிலையை மாற்றவோ 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. தற்போது வெள்ளை மாளிகையின் ஆய்வு முடிந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான Tata Consultancy Services (TCS), Infosys, Wipro, HCL Tech மற்றும் Tech Mahindra ஆகியவற்றின் மிகப்பெரிய சந்தை அமெரிக்கா தான். மொத்த H-1B விசா பயனாளிகளில் சுமார் 71% இந்தியர்கள் என்பதால், இந்த மாற்றம் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை பாதிக்கலாம். ஊழியர்கள் வெளியேற்றம் (Labor Churn) அதிகரிப்பதாலும், குறுகிய காலத்தில் விசா மற்றும் ஆள்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்வதாலும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
இது இன்னும் சட்டமாகவில்லை. RIN 1615-AD22 என்று அழைக்கப்படும் இந்த முன்மொழிவு, 'Federal Register'-ல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களுக்காக திறக்கப்படும். அப்போதுதான் இறுதி விதிமுறைகள் தெரியவரும். எனவே, ஐடி நிறுவனங்களின் அடுத்தடுத்த குவார்ட்டர் ரிசல்ட் மீட்டிங்குகளில் இதுகுறித்த மேனேஜ்மென்ட்டின் கருத்துக்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
