Reliance அதிரடி: மற்ற நிறுவனங்கள் ஜோர்!
கடந்த வார பங்குச் சந்தை நிலவரப்படி, இந்தியாவின் முதல் 10 அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் (Market Capitalization) ஒட்டுமொத்தமாக ₹4.55 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம் மட்டும் இமாலய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் சந்தை மதிப்பு ₹1,41,887.97 கோடி உயர்ந்து, மொத்தம் ₹19,63,358.79 கோடியாக எகிறியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி (LIC) தனது சந்தை மதிப்பில் ₹64,926.1 கோடி வளர்ச்சியைப் பெற்று, ₹5,70,198.54 கோடியை எட்டியுள்ளது. அதேபோல், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் மதிப்பு ₹52,516.39 கோடி அதிகரித்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) ₹52,476.97 கோடி உயர்வு கண்டுள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்களும் இந்த ஏற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இதன் ஒட்டுமொத்த விளைவாக, பி.எஸ்.இ பெஞ்ச்மார்க் (BSE Benchmark) குறியீடு 3.53% வளர்ச்சியைப் பதிவு செய்தது.
IT பங்குகள் ஏன் வீழ்ந்தன?
சந்தை இப்படி உச்சம் தொட்டாலும், தொழில்நுட்பத் துறையின் (IT Sector) முக்கிய நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ₹88,172.8 கோடி சரிந்து, ₹10,64,242.35 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல, இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனத்தின் சந்தை மூலதனம் ₹63,462.66 கோடி குறைந்து ₹6,26,067.95 கோடியாக சரிந்தது.
உலகளாவிய சந்தையில் தொழில்நுட்பப் பங்குகளின் விலை வீழ்ச்சி, மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏற்படும் தாக்கம் குறித்த அச்சங்கள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி இரண்டாவது இடத்திலும், பார்தி ஏர்டெல் மூன்றாவது இடத்திலும் தொடர்கின்றன. TCS மற்றும் Infosys நிறுவனங்கள் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.