கச்சா எண்ணெய் விலையும் ரூபாயின் ஏற்றமும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்க்கு கீழ் சரிந்ததால், இந்திய ரூபாய்க்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதால், அதன் விலை குறையும்போது டாலருக்கான தேவை குறைந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு (Current Account Deficit) அழுத்தம் குறையும்.
மேலும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் சந்தையில் அதிக அளவில் டாலரை விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரிசர்வ் வங்கி (RBI) ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்படுவதைக் காட்டுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு சரியல?..
ரூபாய் மதிப்பு உயர்ந்தது செய்திகளில் முக்கிய இடம் பிடித்தாலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (Forex Reserves) 681.38 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத மிகக்குறைந்த அளவு. கையிருப்பு குறைந்ததற்குக் காரணம், ரிசர்வ் வங்கி டாலரை விற்றது மட்டுமல்லாமல், தங்கத்தின் மதிப்பு சரிந்ததாலும், வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பிலும் ஏற்பட்ட சரிவு காரணமாகவும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?
தற்போதைய இந்த தற்காலிக ஏற்றம் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட கால அடிப்படையில் சில இடர்பாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள், அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதில் ஒரு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம்.
மேலும், வெளிநாட்டு சந்தையில் ரூபாயின் எதிர்காலம் குறித்து சில சந்தேகங்கள் நிலவுவதாகவும், இதனால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி அருகே புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்தால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரக்கூடும். அப்படி நடந்தால், ரூபாயை ஆதரிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிக செலவாகும்.
அடுத்தகட்ட நகர்வுகள்
தற்போது 94.50 என்ற நிலையை டாலர்-ரூபாய் ஜோடிக்கு ஒரு முக்கிய ஆதரவு நிலையாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் ஆகியவை ரூபாயின் எதிர்காலப் பாதையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
