கார்பன் உமிழ்வின் பொருளாதார தாக்கம் **4 மடங்கு** அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இது இந்திய முதலீட்டாளர்களுக்கு நீர் பற்றாக்குறை, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான ஒழுங்குமுறை அபாயங்களை உருவாக்கியுள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது நீண்டகால சுற்றுச்சூழல் பிரச்சனை என்பதை தாண்டி, இப்போது நிறுவனங்களின் உடனடி நிதி சிக்கலாக மாறியுள்ளது. ஒரு டன் கார்பன் வெளியேற்றத்திற்கான பொருளாதார இழப்பு (Social cost of carbon) இனி $437 டாலர் வரை உயரக்கூடும் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் லாபம் மற்றும் சப்ளை செயினை நேரடியாக பாதிக்கும்.
நீர் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி பாதிப்பு
கங்கை மற்றும் சிந்து நதிப்படுகைகளைச் சார்ந்திருக்கும் தெற்காசியப் பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. டெக்ஸ்டைல், கெமிக்கல் மற்றும் பார்மா நிறுவனங்கள் அதிகப்படியான நீரை பயன்படுத்துவதால், நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் உற்பத்தி தாமதம் மற்றும் கூடுதல் சுத்திகரிப்பு செலவுகளை சந்திக்க நேரிடும்.
ஏற்றுமதி மற்றும் கார்பன் வரி (Trade Compliance)
உலக நாடுகளின் கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் வரிகள் (Carbon border adjustment taxes) இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளன. குறிப்பாக ஸ்டீல், சிமெண்ட் மற்றும் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனங்கள், சர்வதேச தரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், அதிக வரி சுமையையும் போட்டித்திறன் இழப்பையும் சந்திக்க நேரிடும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
நிறுவனங்கள் எவ்வளவு தூரம் பசுமை எரிசக்திக்கு (Green Energy) மாறுகின்றன மற்றும் நீர் பாதுகாப்பிற்கு என்ன மாதிரியான முதலீடுகளைச் செய்கின்றன என்பதைக் கண்காணிப்பது அவசியம். எதிர்காலத்தில் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சமாளிக்கும் திறனே அந்தந்த நிறுவனங்களின் லாபத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
