Punjab-ல் 2026-27 நெல் கொள்முதல் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடுமையான இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட 270 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் தேங்கியுள்ளதால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அக்டோபர் 1 முதல் பஞ்சாபில் காரிஃப் மார்க்கெட்டிங் சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆனால், தற்போதுள்ள கள நிலவரம் பெரும் சவாலாக மாறியுள்ளது. கிட்டதட்ட 180 முதல் 182 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளில், தற்போது 270 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் குவிந்துள்ளன. இதனால் புதிய நெல் வரத்துக்கான இடவசதி சுத்தமாக இல்லை.
அரசின் அவசர கோரிக்கை
முதலமைச்சர் பகவந்த் மான் மத்திய அரசிடம் உடனடியாக தலையிட கோரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 10-க்குள் 6 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும், அக்டோபர் மாதம் முழுவதும் 15 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும் கிடங்குகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக நடக்கவில்லை எனில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் பெரிய தொய்வு ஏற்படும்.
மில் உரிமையாளர்களின் தயக்கம்
இதற்கிடையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் ப்ரோசிஜர் (SOP) சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. ஸ்டாக் சரிபார்ப்பில் முறைகேடுகள் இருந்தால் அபராதம் மற்றும் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்ற அச்சத்தால், புதிய நெல் மூட்டைகளை ஏற்கும் பணியில் மில் உரிமையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். இந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விதிகளின் மோதல், விவசாயிகளின் பேமெண்ட் சுழற்சியையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
