உலக நாடுகள் AI-க்கு தயாரா?
"இன்றைய நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக வேலைவாய்ப்பில் ஏற்படப்போகும் பெரிய மாற்றங்களுக்கு எந்த நாடும் தயாராக இல்லை" என Pearson Global CEO ஓமர் அப்பாஷ் தெரிவித்துள்ளார். AI வேகமாக பல துறைகளில் ஒருங்கிணைக்கப்படுவதால், ஏற்கனவே இருக்கும் திறன்கள் பற்றாக்குறை (Skill Gaps) மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சவால்கள் வளரும் நாடுகளுக்கு மட்டும் உரியவை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் Vocational Skills நெருக்கடி
குறிப்பாக, இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்துக்களை அப்பாஷ் வெளிச்சம் போட்டுக் காட்டினார். உலகளவில் Vocational Skills பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட அதிகம் இருப்பதாகவும், இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலும் காணப்படுவதாகவும் அவர் கூறினார். கட்டுமானம், எலக்ட்ரீஷியன், பிளம்பர், மெக்கானிக் போன்ற திறன்கள் கொண்ட தொழிலாளர்களுக்கு தேவை அதிகமாக இருக்கும் என்றும், AI வளர்ச்சிக்கு மத்தியிலும் இந்த பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடையூறுகள்
AI-யுகத்திற்கு உலக மக்களை தயார்படுத்துவதற்கு, ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அப்பாஷ் வலியுறுத்தினார். தற்போது, வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு "signalling failure" நிலவுவதாகவும் அவர் விளக்கினார். நிறுவனங்கள் தேவையான திறன்களை கண்டறிவதில் சிரமப்படுவதாகவும், அதே சமயம் விண்ணப்பதாரர்கள் AI மூலம் Resume-களை உருவாக்கி, அவை AI மூலமே ஸ்கிரீன் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இதனால், சரியான நபரை வேலைக்கு அமர்த்துவது மிகவும் கடினமாகிறது. Pearson ஆய்வின்படி, இது போன்ற திறன்களின் பொருத்தமின்மையால் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு $1.1 டிரில்லியன் செலவாகிறது. இங்கிலாந்தில் இந்த இழப்பு £100 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திறன்களையும் எதிர்கால வேலை தேவைகளையும் சீரமைப்பதில் உள்ள பெரும் பொருளாதார முக்கியத்துவத்தை காட்டுகிறது.