பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. எரிசக்தி நுகர்வைக் குறைக்கவும், அரசு செலவுகளைக் கட்டுப்படுத்தவும் வணிக நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் செங்கடல் பகுதியில் நிலவும் சப்ளை செயின் பாதிப்புகள் காரணமாக, அரசு புதிய சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்புகளை அந்த நாட்டு கேபினட் டிவிஷன் உடனடியாக வெளியிட்டுள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்:
- அரசு வாகனங்கள்: இனி புதிய அரசு வாகனங்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருக்கும் வாகனங்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீடு 50% குறைக்கப்படும்.
- வணிக நேரம்: கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் தினமும் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் இரவு 11 மணி வரையிலும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரையிலும் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், திருமண விழாக்களில் 'சிங்கிள் டிஷ்' (Single Dish) முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகளின் பயணம்: அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு 3 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான பயணம் என்றால், அவர்கள் எகானமி வகுப்பில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
நிர்வாக ரீதியான செலவுகளை 5% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளுக்குப் பதிலாக, ஆன்லைன் மூலம் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் துறை, ராணுவம் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பொருளாதாரத்தைச் கவனிக்கும் முதலீட்டாளர்களுக்கு, இது பாகிஸ்தானின் பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி இருப்பு குறித்த கவலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எரிபொருள் இறக்குமதி செலவை எப்படிக் குறைக்கப் போகிறார்கள் என்பதே நாட்டின் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
